இந்தியாவின் அயோத்தியா நகரில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் நிலத்தை பௌத்த புனித பூமியாக அறிவித்து அந்த இடத்தைஅயோத்தியா பௌத்த விகாரை என்று அறிவிக்க வேண்டும் என்று கோரிய மனுவை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
அந்த கோவில் கட்டப்படும் இடத்தில் பௌத்த மரபுச் சின்னங்கள் இருந்தன என்று கூறிய மனுதாரரின் கூற்றை ஏற்க மறுக்க தலைமை நீதியரசர்கள் கலாநிதி சந்திரசூட் மற்றும் பி எஸ் நரசிம்மா அடங்கிய அமர்வு மறுத்துவிட்டது.
“இந்த விடயம் ஏற்கனவே அயோத்தியா நிலப்பரப்பு தொடர்பான தீர்ப்பில் பரிசீலிக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மனுவை மீளப் பெறுங்கள் அல்லது நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்” என்று நீதிபதிகள் கூறியதை அடுத்து மனுதாரர் வினீத் மௌரியா மனுவை மீளப் பெற்றுக்கொண்டார்.
தற்போது ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் 16ஆம் நூற்றாண்டில் பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்னரே அங்கு பௌத்த சின்னங்களுடன் கட்டுமானங்களும் இருந்தன என்று மனுதாரர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்திய நீதிமன்ற வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு தீர்ப்பாகக் கருதப்படும் அயோத்தியா ராமர் கோவில் நிலப்பிரச்சனை தீர்ப்பை அளிந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன குழாமில் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூடும் ஒருவராக இருந்தார்.
வட இந்திய மாநிலமான உத்திர பிரதேசத்திலுள்ள அயோத்தியா நகரில் ராமர் பிறந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் உரிமை கோரினர். 70 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில் கடந்த 2019 நவம்பர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் பிரகாரம் அந்த நிலப்பரப்பு ராமர் ஆலயம் கட்டுவதற்காக இந்துக்கள் தரப்பிற்கு அளிக்கப்பட்டது. அதேவேளை முஸ்லிம்கள் அதே நகரின் மற்றொரு பகுதியில் பள்ளிவாசல் கட்டிக்கொள்ள அரசு ஐந்து ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
எனினும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிற்கு இடையேயான அந்த வழக்கு விசாரணையின் போது தாங்களும் அந்த வழக்கில் ஒரு அங்கமாக சேர்க்கபப்ட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் தமது கருத்துக்களை எடுத்துரைக்க முடியவில்லை என்று மனுதாரரின் சட்டத்தரணி வலியுறுத்த முயன்றார். அங்கு பௌத்த சின்னங்கள் காணப்பட்டதால் அது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் பூமியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று வாதிட முற்பட்டார். அதன் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட் அது அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு முடிந்து போன விடயம். எனவே அதை மீண்டும் எழுப்ப இயலாது என்று கண்டிப்புடன் தெரிவித்தார் என்று நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
“நாட்டின் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்த பிறகு, உறுதி செய்யப்படாத தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில் இப்படியான கோரிக்கைகளை வைப்பது ஏற்புடையது மட்டுமின்றி இலங்கையில் அரச நிறுவனங்கள் அல்லது அரசின் ஆதரவுடன் செயற்படும் திணைக்களங்கள் அல்லது அமைப்புகள் அறிவியல் ரீதியான தொல்லியல் ஆதாரங்கள் இன்றி அங்கு பௌத்த மதச்சின்னங்கள் இருந்தது என்று கூறி, இதர மதம் மற்றும் கலாச்சாரங்களை சேர்ந்தவர்களின் நிலங்கை அபகரிக்க நடவடிக்கைகளிற்கு ஒப்பாக இது உள்ளது. அப்படியான திந்திரோபாயங்கள் இந்தியா மட்டுமின்றி வேறு எந்த நாட்டிலும் எடுபடாது-அதுவும் 5 நீதியரசர்களை கொண்ட அரசியல் சாசன குழாம் தீர்ப்பளித்த பிறகு” என்று மத விடயங்கள் தொடர்பான அரசியல் ஆய்வாளர் கலாநிந்தி எஸ் ஆர் டே கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் 2011 ஆண்டின் மக்கள் தொகை கணக்கீட்டின்படி 8.5 மில்லியல் அல்லது 0.7% மக்கள் பௌத்த மதத்தை பின்பற்றுகிறார்கள்.
TL