சில அரசியல் கட்சிகளின் கருத்துக்களை நம்பி, டொலரை மறைத்து வைத்திருந்த நபர்களுக்கு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டுக்கு டொலரை அனுப்ப வேண்டாம் என்று இந்தக் கட்சிகள் கடந்த காலத்தில் பாரிய அளவிலான பிரசாரங்களை முன்னெடுத்ததாகவும் அவர் கூறினார். விவசாய அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் மஹிந்த அமரவீர உரையாற்றினார். ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருகிறது. 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்குக் கிடைத்துள்ளமை, சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, ஏற்றுமதி வருமான அதிகரிப்பு என்பன ரூபாவின் பெறுமதி அதிகரித்தமைக்கான காரணமாகும். ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால், வெளிநாடுகளில் பணியாற்றுவோர் இலங்கைக்கு டொலர்களை அனுப்ப ஆரம்பித்துள்ளார்கள். உண்டியல் மூலமாக அனுப்பப்படும் டொலருக்கு சந்தைப் பெறுமதியை விட குறைந்த அளவிலான தொகையே செலுத்தப்படுகிறது. அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 300 ரூபா வரை வீழ்ச்சி அடையும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். உணவுப் பொருட்களின் விலை தற்சமயம் குறைந்து வருகிறது. சீனி, பருப்பு, கோதுமை மா போன்றவற்றின் விலைகளிலும் வீழ்ச்சியை அவதானிக்க முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.