லங்கா சினி கம்பனியின் 70 கோடிக்கும் அதிகமான நிதி மோசடி தொடர்பில் அரச கணக்காய்வினால் விசாரணை

லங்கா சினி கம்பனியில் இடம்பெற்ற 70 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி மோசடி தொடர்பில் அரச கணக்காய்வு அலுவலகம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சீனி உற்பத்தியில் கொதிகலன்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் எண்ணெய்க்குப் பதிலாக கச்சா எண்ணெயைப் பயன்படுத்தி இந்த பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. லங்கா சீனி கம்பனிக்குத் தேவையான எரிபொருளை காலாகாலமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமே வழங்கியது. இதன் பின்னர் இடைத்தரகர் மூலம் எரிபொருள் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போதே இந்த மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பல்களிலிருந்து இறக்கப்படும் கச்சா எண்ணெயை வழங்கி, ஒப்பந்ததாரர் 34 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளார். இதனால் பல கோடி ரூபா மதிப்புள்ள கொதிகலன்கள் செயலிழந்துள்ளன. லங்கா சினி கம்பனிக்கு 70 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரச கணக்காய்வு தெரிவித்துள்ளது. சினி கம்பனியின் முன்னாள் தலைவருக்கு இந்த மோசடி நடந்துள்ளமை தெரிந்திருக்கும் என அரச கணக்காய்வு கூறுகிறது. இது தொடர்பில் கணக்காய்வு அறிக்கையொன்று கோரப்பட்ட போதிலும், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இதேவேளை, லங்கா சினி கம்பனியின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாரத சமரகோன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். போர்க் காலத்தின் போது கஜபா படைப்பிரிவில் பணியாற்றிய இவர், தோட்ட அபிவிருத்திச் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
