அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலியின் விடுதலைக்கு எதிராக சட்டமா அதிபர் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மேன்முறையீட்டு மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேல்நீதிமன்ற நீதிபதி இன்று விடுமுறையில் இருப்பதால், இது தொடர்பான மனுவை அடுத்த மாதம் 3ஆம் திகதி பரிசீலிக்க அழைப்பு விடுக்கப்படும் என உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். இன்று வசந்த முதலிகே நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிக்கு போதிய சாட்சியங்கள் இல்லை எனக் கூறி கொழும்பு பிரதான நீதவான் அண்மையில் விடுதலை செய்தார். இந்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும் அதனை திருத்துமாறு கோரியும் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டை தாக்கல் செய்திருந்தார்.