Home » வடக்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கிறது ; சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை!

வடக்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கிறது ; சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை!

Source

இலங்கையின் வடக்குப் பகுதியில் சீனாவை அனுமதித்துள்ளமை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் இந்தோ-பசிபிக் பிரதேசத்திலும் அமைதியையும் சமாதானத்தையும் பேணுவதற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சீனாவின் வல்லாதிக்க போட்டிக்கு இலங்கையை பயன்படுத்த இடமளிக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினராகிய நாம், இலங்கைக்குள் சீனாவின் முதலீடுகள் தொடர்பாகவும் சீனாவின் ஊடுருவல்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பது தொடர்பாகவும் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கின்றோம். இறுதி யுத்த காலத்தின்பொழுது, யுத்தத்தை நடாத்தி முடிப்பதற்காக, பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான இராணுவ தளபாட உதவிகளை சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை அரசு பெற்றுக்கொண்டது. அதற்குக் கைமாறாக இலங்கையில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் சீனாவிற்குக் கதவைத் திறந்துவிட்டது.

அது மாத்திரமல்லாமல், இலங்கையைக் கடன்பொறிக்குள் தள்ள வேண்டும் என்ற அடிப்படையில், வர்த்தகரீதியில் எவ்வித பெறுமானமும் அற்ற ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் போன்றவற்றிற்கும் சீனா பல ஆயிரம் டொலர்களைக் கடனாக வழங்கியது. இப்பொழுது அடுத்த நூறு வருடங்களுக்கு தனது பிடிமானத்தை இலங்கையின்மீது இறுக்கியிருக்கிறது.

இலங்கையில் சீனாவின் வருகை என்பது இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இலங்கை சீனாவிற்கு அகலமாகக் கதவுகளைத் திறந்து விட்டுவிட்டு இந்தியா எனது சகோதரன் என்றும் சீனா எனது நண்பன் என்றும் கூறுவது நகைப்புக்குரியது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், சீனாவின் நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. சர்வதேச தளங்களில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் செயற்பட்டு வரும் சீனா, வடக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதுபோன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே.

வடக்கு மாகாணத்தில் சில நூறு மீனவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குவதும், பல்கலைக்கழகத்திற்கு சில இலட்சம் ரூபாய்களைக் கொடுத்து மாணவர்களின் நலன்பேணுவதும், இவற்றுடன் கடல் அட்டைப் பண்ணைகள் அமைத்தல் போன்ற செயல்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நடவடிக்கைகளில் சீன நாட்டின் உளவுப் பிரிவினர் செயற்படுவதாகவும் பேசப்படுகின்றது. இதுதொடர்பில் இப்பொழுது தமிழ் நாட்டிலும் அச்சம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

தமிழ் நாட்டின் புலனாய்வுப் பிரிவினர் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சீருடை அணியாத சீன இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் அவர்கள் கடல் அட்டை பண்ணைகள் அமைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தமிழகத்திற்குள் அவர்களது ஊடுருவல் ஏற்படலாம் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழக கடல் எல்லைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவேண்டும் என்றும் மததிய அரசிடம் கோரியிருக்கின்றனர்.

இலங்கைக்குள் சீனாவின் ஊடுருவல் என்பது தமிழ் நாட்டை அச்சம் கொள்ளும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழகமே கூறும் நிலை உருவாகியுள்ளது. இது இலங்கைக்கு ஆரோக்கியமான ஒரு சூழல் அல்ல. வடக்கு மாகாணத்திற்குள் சீனாவின் சகலவிதமான நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்தத் தவறினால் அது பெரும் பின்விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம்.

நாம் இந்த விடயத்தைத் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்ற பொழுதிலும் இலங்கை அரசாங்கம் இதனைக் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் சீனா தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. ஆகவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அமைதிக்காகவும், இலங்கையின் அமைதிக்கும் பாதுகாப்பிற்காகவும் சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டியது இலங்கையின் கடமையாகும்.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image