வடக்கு மாகாணசபையின் கீழான சிற்றூழியர் வெற்றிடங்களுக்கு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களைச் சேர்ந்த 427பேரை விரைவில் நியமிப்பதற்கான இரகசிய நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கு மாகாண பையின் கீழ் உள்ள அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் சிற்றூழியர்களுக்கு சுமார் ஆயிரத்து 200 வெற்றிடங்கள் உள்ளன. இது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது.
கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புத் திட்டத்தில் வடக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட 119பேர் கடந்த வாரம் நேர்முகத் தேர்வு அழைக்கப்பட்டனர். இவர்களில் 117 பேர் நேர்முகத் தேர்வுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் வடக்கு மாகாண நிர்வாகத்துக்குள் உள்வாங்கப்படவுள்ளனர். எஞ்சியுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு சப்பிரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் உள்வாங்கப்பட்டவர்களின் தொகை அதிகம். அந்த மாகாணங்களிலுள்ள வெற்றிடங்கள் நிரப்பப்பட்ட பின்னரும் அதிகளவானோர் அங்கு காணப்படுகின்றனர். அவர்களில் 427பேரை வடக்கு மாகாணத்தில் நியமிப்பதற்குரிய நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண இளையோருக்கு கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்பை தட்டிப் பறிக்க நினைக்கும் ஒருவரே ஆளுநராக இருப்பது வேதனையளிக்கின்றது. வடக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு இந்த வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க ஆளுநர் முன் வரவேண்டும். மாகாணசபையில் உருவாக்கப்பட்ட பிரமாணத்துக்கு அமைவாக வடக்கு மக்களுக்கு உரித்தான ஒன்றை வேறு மாகாணத்தவர்களுக்கு வழங்கி, மீண்டும் நீதிமன்றை நாடும் சூழலை ஏற்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு மாகாண பிரதமர் செயலர் அலுவலகத்தால் வெளி மாகாணங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேரை நியமிக்குமாறு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை கடந்த மாதம் 26ஆம் திகதியே ‘உதயன்’ முதன்முதலில் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
TL