வட்அப் செயலியின் ஊடாக இடம்பெறும் வீசா மோசடிகள் பற்றி எச்சரிக்கை

வட்அப் செயலியின் ஊடாக இடம்பெறும் வீசா மோசடிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. வீசா விண்ணப்பத்திற்காக ஒருபோதும் வட்அப் செயலியை தாம் பயன்படுத்துவது இல்லை என்றும் அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான போலியான விளம்பரங்களின் மூலம் அதிகளவிலானோர் ஏமாற்றப்படுவதாக கிடைத்துள்ள முறைப்பாட்டை அடுத்து இந்த எச்சரிக்கை அறிவித்தல் வெளியாகியிருக்கின்றது. வீசா சேவையை வழங்குவதாகக் கூறி, குறிப்பிட்ட ஒரு தரப்பு மோசடிச் செயற்பாடுகளில் ஈடுபடுபட்டு வருவதாக அமெரிக்க தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, ஐரோப்பா, அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறும் முகவர் நிலையங்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
கல்வி ஆலோசனை முகவர் நிலையம் என்ற பெயரில் இயங்கும் பல நிறுவனங்கள் பணம் பறிக்கும் நோக்கோடு செயற்படுகின்றமை தெரியவந்துள்ளது. அதிகளவிலான இளைஞர்கள் மேற்குல நாடுகளுக்குச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்த வேளையில், போலியான கல்வி ஆலோசனை முகவர் நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
