Home Against Government வன்முறைக்குப் பழக்கப்பட்ட அரசாங்கம் பழகிய வழியிலேயே பதிலளிக்கும் – தமிழ் சிவில் அமைப்புகளின் சம்மேளனம்

வன்முறைக்குப் பழக்கப்பட்ட அரசாங்கம் பழகிய வழியிலேயே பதிலளிக்கும் – தமிழ் சிவில் அமைப்புகளின் சம்மேளனம்

Source

வன்முறைக்குப் பழக்கப்பட்டு போன சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்கள் பொதுமக்களின் அமைதிவழிப் போராட்டங்களுக்கு எப்போதும் தனது சொந்த இனமாக இருந்தாலும் தமக்குப் பழகிய வழிகளிலேயே பதிலளிக்கும் என்பது மீண்டும் ஒரு தடவை கடந்த 09ம் திகதி நிரூபிக்கப்பட்டுள்ளது என தமிழ் சிவில் அமைப்புகளின் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2022.05.09ம் திகதி கொழும்பில் உரிமைக்காக அமைதி வழியில் போராடும் மக்கள் மீது ஏவிவிடப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் முகமாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

சுதந்திர இலங்கையின் அரசாங்கங்களுள் மிகமோசமான அரசாங்கமான இராஜபக்ச குடும்பத்தினரின் அரசாங்கம் காலிமுகத்திடலிலும், அலரி மாளிகைக்கு முன்பாகவும் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு எதிராகத் தனது குண்டர்களை ஏவி வன்முறைத் தாக்குதல் ஒன்றை கடந்த 09.05.2022ம் திகதி நடாத்தியுள்ளது. இந்த அரக்கத்தனமான, மற்றும் ஜனநாயக விரோதமான நடவடிக்கையைத் தமிழ் சிவில் சமூக அமைப்புகளாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் தவறான அரசியல், பொருளாதார கொள்கைகளால் சீரழிந்துவந்த நாட்டின் பொருளாதாரக் கட்டுமானம் ஒட்டுமொத்தமாக நிலை குலைந்துள்ளது. இது மிகத்தீவிரமான பொருளாதார நெருக்கடிகளை மக்களுக்கு இன்று ஏற்படுத்தியுள்ளது. விளைவாக தெற்கில் பொதுமக்கள் பதவியில் உள்ள அரசுக்கு எதிராக குறிப்பாக இராஜபக்சக்களுக்கு எதிராக கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாகத் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆரம்பத்தில் தற்போதைய ஜனாதிபதியைப் பதவி விலகும் கோரிக்கையுடன் தொடங்கப்பட்ட போராட்டங்கள் படிப்படியாக மகிந்த  பதவி விலகவும், பின்னர் அனைத்து இராஜபக்ச குடும்பத்தினரும் பதவி விலகவும், இன்று அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவும் கோரும் போராட்டமாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. தெற்கின் இந்த மாற்றங்களைத் தமிழ் மக்களும் மிகவும் கரிசனையோடும், கவனத்துடனும் அவதானித்து வருகின்றனர். கடந்த கால தங்களது கசப்பான அனுபவங்களின் காரணமாக இன்னமும் பெரும்பாலான தமிழர் இப்போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் அவதானிப்பவர்களாக இருந்து வருகின்ற அதேவேளை குறிப்பிடத்தக்க அளவு தமிழர்கள் இந்த போராட்டங்களில் தங்களின் பங்களிப்பினை தனிநபர்களாகவும், குழுக்களாகவும் வழங்கி வருகிறார்கள். 

ஆரம்பம் முதல் தொடர்ந்து பதவிக்கு வந்த அனைத்து சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்களும் தமிழ் மக்களின் தேசிய இருப்பை அழிக்கும் நோக்கில் மேற்கொண்டு வருகின்ற இனவழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து ஆரம்பத்திலிருந்து (இருபது வருடங்களுக்கு மேலாக) அமைதி வழியில் தமிழ் மக்கள் போராடியபோது அந்த அரசாங்கங்கள் அவற்றை மிகையான வன்முறை மூலம் எதிர்கொண்டன. அமைதி வழியிலான எமது கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டன.  தொடர்ந்தும் தமிழினவழிப்பு செயற்பாடுகளை அரசாங்கங்கள் தொடர்ந்தன. இந்நிலை தமிழ் இளைஞர்களை வேறு வழியேதுமின்றி 1970களில் ஆயுதமேந்த உந்தித்தள்ளியது. அப்போதும் தமிழர்களின் வாழ்வுரிமைகளை வழங்க மறுத்த சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்கள் தமிழர்கள் மீது மேன் மேலும் அதிகரித்த அளவில் வன்முறைகளைத் திணித்தன. ஈற்றில் இதே இராஜபக்ச குடும்பத்தின் முன்னைய ஆட்சி, தமிழ் மக்கள் மேல் தொடர்ச்சியான பாரிய படுகொலைகளை நடாத்தி, ஈற்றில் முள்ளிவாய்க்காலில் 2009 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்த நூற்றாண்டில் உலகின் முதலாவது பாரிய இனப்படுகொலை மூலமாக தமிழர்களின் ஆயுதவழி எதிர்ப்பையும் மௌனிக்கச் செய்தது.

வன்முறைக்குப் பழக்கப்பட்டு போன சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்கள் பொதுமக்களின் அமைதிவழிப் போராட்டங்களுக்கு எப்போதும் தனது சொந்த இனமாக இருந்தாலும் தமக்குப் பழகிய வழிகளிலேயே பதிலளிக்கும் என்பது மீண்டும் ஒரு தடவை நேற்று முன்தினம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

அரசு வழமை போலவே, உரிமைகளைக் கோரிய போராட்டக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் எதிராக வன்முறையை நேற்று முன்தினம் நிகழ்த்தியபோது தெற்கின் பொதுமக்கள் அரச வன்முறைக்கு பொதுமக்களின் வன்முறையே பதில் என வீதியிலிறங்கித் திருப்பி அடித்துள்ளதற்குப் பின்னாலுள்ள மன உணர்வை எங்களால் இலகுவில் புரிந்து கொள்ள முடிகின்றது. அந்த வன்முறைகளின் அங்கமாக தமது எதிரிகள் என நம்புவோரின் மீது தாக்குதல் நடாத்துவது, அவர்களின் சொத்துக்களை அழிப்பது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது என வீதியிலிறங்கியுள்ள பொதுமக்களின் எதிர்வினைகள்  தொடர்கின்றன. இத்தகைய செயற்பாடுகளை போராடுபவர்களும் பொதுமக்களும் அவதானமாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என நாம் அன்புடன் வேண்டுகின்றோம்.

ஏனெனில் சிங்கள பௌத்த  பேரினவாத அரசாங்கமும், அதனைத் தாங்கிப்பிடிக்கும் சித்தாந்தங்களும் அரசும் வன்முறையின் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியது என்பதற்கான அனுபவ சாட்சிகளாக தமிழ் மக்களாகிய நாம் உள்ளோம். ஆகவே தெற்கின் போராட்டக்காரர்களும் பொதுமக்களும் மிக அவதானமாகவும், நிதானமாகவும், தந்திரோபாயமாகவும், அதேவேளை பாதுகாப்பாகவும்  அரசுக்கு எதிரான தங்களது இந்த போராட்டத்தை இறுதி வெற்றிவரை கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்துகின்றோம்.

சிங்கள மக்களிடையே வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள பௌத்த பெருமித சிந்தனைகளை அவற்றால் இலாபமடைந்து வரும் சக்திகள் தமது நலன்களையும் இருப்பையும் பாதுகாப்பதற்கு எப்போதும் பயன்படுத்தி வந்துள்ளனர். இப் போராட்டத்திலும் பிரிவினைவாத சிந்தனைகளாலும், தவறான ஏவல்களாலும் மட்டுமல்லாது போலித் தோழமையைத் தெரிவிப்பதனூடாகவும் போராட்டத்தைத் திசை திருப்பவும் முயற்சிக்கின்றனர்.

இந்த சக்திகள் தென்பகுதி மக்களின் தற்போதைய போராட்டங்கள்  தங்களது நலன்களைப் பாதிக்கக் கூடிய உண்மையான மாற்றங்களுக்கு வழிசமைக்கக்கூடுமோ, புரட்சிகரமான முழுமையான  மாற்றங்களுக்கு வழிவகுத்துவிடுமோ என அஞ்சுகின்றார்கள். பதிலாக தாமும் மக்களுடன் நிற்பவர்கள் என்ற போர்வையில் சிறிய யாப்பு மாற்றங்கள் மற்றும் ஒரு சில முக மாற்றங்கள் மூலம் தற்போதைய ஜனாதிபதியைத் தற்காலிகமாகவேனும் தக்க வைத்துக் கொண்டு, சிங்கள பௌத்த பேரினவாத நலன்களுக்கான தற்போதைய யாப்பை இயன்றவரை பேணும் வகையிலான தீர்வுகளைப் பரிந்துரைத்து போராட்டத்தை தறுக்கணிக்க முயன்று வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தெற்கு மக்கள் தங்களது போராட்ட இலக்குகளை இராஜபக்ச குடும்பத்தினரை பதவியில் இருந்து நீக்குவது என்ற குறுகிய இலக்குகளுக்கு அப்பால் வளர்த்தெடுக்க வேண்டும். அந்த இலக்குகளை தெளிவாகவும் வரையறுத்து வெளிப்படுத்தவும் வேண்டும். இந்த நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் காரணமான சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையில் இருந்து விடுவிக்கப்பட்ட மதச்சார்பற்ற, மக்களுக்கு பொறுப்புச் சொல்லும் வகையிலான ஒரு கூட்டாட்சி நாட்டையும், அதற்கேற்றவாறான மனோநிலை மாற்றத்தையும் உருவாக்குவதற்கு ஏற்றதாக ஒரு புரட்சிகரமான போராட்டமாக தங்களது போராட்டத்தை மாற்றி அமைப்பதனை நோக்கமாகக் கொண்டு முன்னேற வேண்டும். இதன் மூலமே இலங்கையின் ஏனைய தேசிய இனங்களும், சமூகங்களும் மனத் தடைகளோ, அச்சமோ இன்றி சிங்கள மக்களின் இன்றைய போராட்டத்தில் கைகோர்க்கும் நிலைமை உருவாகும். அத்தகைய புரட்சிகர நிலை ஒன்றும் அதன் மூலம் வருகின்ற மாற்றங்களும் மட்டுமே நாட்டின் இன்றைய பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை நோக்கிய பாதையில் நாட்டையும் மக்களையும் முன்கொண்டு செல்லும் என தமிழ் சிவில் சமூக அமைப்புகளாகிய நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

• அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்
• அகரம்
• ஐராணி அறக்கட்டளை, மட்டக்களப்பு
• நீதிக்கும் மாற்றத்திற்குமான நிலையம்
• சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அமைப்பு, அம்பாறை
• கிழக்கு பிராந்திய சபை, அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை
• கிழக்கு சமூக அபிவிருத்திக்கான அறக்கட்டளை
• யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
• காத்தான்குடி சிவில் சமூக நிறுவனங்களின் சம்மேளனம்
• சர்வ மதப் பேரவை, மட்டக்களப்பு
• யாழ்ப்பாணம் பொருளியலாளர் சங்கம்
• சமாதான ஆணைக்குழு, அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை
• நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் மற்றும் துறவிகள், வடக்கு – கிழக்கு
• புழதி சமூக இயக்கம், திருகோணமலை
• தமிழ் சமூக செற்பாட்டாளர்கள் இணையம்
• தமிழ் சிவில் சமூக அமையம்
• தமிழர் மரபுரிமைப் பேரவை
• தளம், திருகோணமலை
• தென் கயிலை ஆதீனம்
• வெண் மயில் அமைப்பு, மட்டக்களப்பு

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

AR

The post வன்முறைக்குப் பழக்கப்பட்ட அரசாங்கம் பழகிய வழியிலேயே பதிலளிக்கும் – தமிழ் சிவில் அமைப்புகளின் சம்மேளனம் appeared first on LNW Tamil.

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image