Home » வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

Source
Share Button

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை இன்று பிற்பகல் 01.30 மணிக்கு சமர்ப்பிக்க உள்ளார். பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவினால் தீர்மானிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது. வரவு செலவுத்திட்டக் குழு மீதான விவாதம் நவம்பர் 23ஆம் திகதி ஆரம்பமாவதோடு, டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும். இன்று முதல் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரை ஞாயிறு மற்றும் போயா தினங்களை தவிர, ஏனைய நாட்களில் பாராளுமன்றம் கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் நலன் மற்றும் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட முன்மொழிவுகள் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான நடுத்தர மற்றும் நீண்ட கால முன்மொழிவுகள் இதில் அடங்குகின்றன.

பொதுச் சேவையை திறம்படச் செய்யவும், பொதுச் சேவைப் பணிகளை டிஜிட்டல் மயமாக்கவும், தனியாருக்குச் சாதகமான முதலீட்டு வசதிகளை வழங்கவும் இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை சமூகப் பாதுகாப்பிற்காக அதிகூடிய தொகையான 572 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது. அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்தச் செலவு ஏழாயிரத்து 885 பில்லியன் ரூபாவாகும். இது கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட ஆறாயிரத்து நூறு பில்லியன் ரூபாவை விட ஆயிரத்து 785 பில்லியன் ரூபா அதிகரிகமாகும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட நாட்களில் வாய்மூல பதில்களுக்கான கேள்விகள் எவையும் கேட்கப்படமாட்டாது என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது, 50 கேள்விகள் வாய்வழி பதில்களைக் கேட்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ், சிங்கள, ஆங்கில சேவைகளிலும், அனைத்து பிராந்திய சேவைகளிலும் இன்று முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்ட உரையை நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, வரவு செலவுத் திட்ட உரையை கேட்பதற்காக 400 பாடசாலை மாணவர்கள் இன்று பாராளுமன்ற வளாகத்திற்கு வரவுள்ளனர்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image