வவுனியாவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணை

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் வவனியா நொச்சிமோட்டை பாலத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சாரதியின் கவனயீனமே இந்த விபத்திற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்கும் 23 வயதுடைய நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரும், பஸ் வண்டியின் சாரதியும் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த 17 பேர் வவனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் இருவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
