Home » வவுனியா வடக்கில் 70 ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்படுமா?

வவுனியா வடக்கில் 70 ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்படுமா?

Source
ந.லோகதயாளன். வவுனியா வடக்கில் 400 மில்லியன் அமெரிக்க டொலரில் அமைக்க திட்டமிடப்படும் சீனி உற்பத்தி தொழிற்சாலையில் 1,050 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சரவைப் பத்திரம் தெரிவிக்கின்றது. வவுனியா மாவட்டத்திலே ஜனாதிபதியால் அனுமதிக்கப்பட்டுள்ள கரும்புச் செய்கைக்காக 70 ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளமை தற்போது  புலனாகின்றது. வடக்கின் நுழைவாயிலான வவுனியா மாவட்டம்  ஆயிரத்து 967  சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவு கொண்ட மாவட்டம். தற்போது சர்ச்சைக்குரிய கரும்பு உற்பத்தி மேற்கொள்ள எண்ணும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவானது 686 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட ஓர் பிரதேச செயலாளர் பிரிவாகும். இதிலே வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு என்பது  686 ச.கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது என்ற வகையில் 168 ஆயிரத்து 756  ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இந்த  பிரதேச செயலாளர் பிரிவில் இருந்தே தற்போது சீனித் தொழிற்சாலைக்கும் கரும்பு உற்பத்திக்கும் என்ற பெயரில் 74 ஆயிரம் ஏக்கர் நிலம் ஓர் வெளிநாட்டு நிறுவனத்திற்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது. வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில்
  1. அபிவிருத்திப் பகுதியாக 91 கெக்டேயரும்,
  2. குடியிருப்பு காணி 5,322 கெக்டேயரும்,
  3. நெற் செய்கைக்கான வயல் காணகளாக 4,318 கெக்டேயரும்
  4. தோட்டச் செய்கை நிலங்களாக 369 கெக்டேயரும்
  5. ஏனைய பயிர்கள் பயிரிடக்கூடிய நிலம் 958 கெக்டேயரும் என மொத்தம் 11 ஆயிரத்து 58 கெக்டேயர் நிலம் மட்டுமே தற்போது அங்கே வாழும் 6,100 குடும்பங்களின் வாழ்வியல், வாழ்வாதாரம் ஆகியவற்றுடன்  நிர்வாகம் மற்றும் கற்றல் செயல்பாடுகள் என அனைத்திற்கும் உள்ளது. 11,058 கெக்டேயர் எனில் 27 ஆயிரத்து 313 ஏக்கர் நிலமாகும்.
இதேநேரம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே வனவளத் திணைக்களத்தின் கீழ் 01.அடர்ந்தகாடுகள் என்ற வகையில் 47 ஆயிரத்து 320 கெக்டேயரும்,
  1. திறந்த காடாக 4 ஆயிரத்து 4 கெக்டேயரும்
  2. வனவள நடுகைப் பகுதியாக 143 கெக்டேயரும் உள்ளடங்களாக  மொத்தமாக  தற்போது 53  ஆயிரத்து 467 கெக்டேயர் நிலம் அல்லது  132 ஆயிரத்து 696 ஏக்கர் நிலம் வனவளத் திணைக்களத்தின் பிடியிலேயே உள்ளதாக மாவட்டச் செயலகம் தகவல் அறியும் சட்டத்தில் வழங்கிய  பதில் உறுதி செய்கின்றது.
இதேநேரம் எஞ்சிய நிலங்களாக
  1. சிறு பற்றைகள் கொண்ட நிலமாக 2 ஆயிரத்து 169 கெக்டேயர் நிலமும்,
  2. புல்வெளிகளாக 88 கெக்டேயரும்
  3. நீர் ஏரிகள் குளங்களா ஆயிரத்து 915 கெக்டேயர் என 4 ஆயிரத்து 172 கெக்டேயர் அல்லது 10 ஆயிரத்து 305 ஏக்கர் நிலம் உள்ளதோடு ஏனைய வகையான பாவனையற்ற நிலங்களாக 204 கெக்டேயர் அல்லது 504 ஏக்கர் நிலமாகவே இந்த 686 ச.கிலோமீற்றர் பரப்பளவு என்றால் 168 ஆயிரத்து 756  ஏக்கர் நிலப்பரப்பளவைக் கொண்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் 6 ஆயிரத்து 100 குடும்பங்களின்  குடியிருப்பு நிலத்துடன் அவர்களின் வயல், தோட்ட காணிகள்கூட வெறுமனே 27 ஆயிரத்து 313 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. இது பிரதேச செயலாளர் பிரிவின் 18 வீதமான நிலமாக காணப்படுவதோடு வனவளத் திணைக்களத்திடம் 132 ஆயிரத்து 696 ஏக்கர் நிலப்பகுதி என்ற வகையில் 74 வீதமான நிலம் உள்ளது.
இதேவேளை எஞ்சிய நிர் நிலைகளான நிலமாக காணப்படும் 11 ஆயிரத்து 500 வரையான நிலம் 8 வீதமாகவுமே மாவட்டத்தின் மொத்த நிலம் உள்ளது. அவ்வாறானால் கரும்புச் செய்கைக்காக 74 ஆயிரம் ஏக்கர் என்பது பிரதேசத்தின் 41 வீதமான நிலமாக இருக்கும்போது இது எங்கிருந்து பெறப்படவுள்ளது என்ற நியாயமான கேள்வி ஒன்று எழுந்துள்ளது. இந்தளவு சர்ச்சையின் மத்தியில் 74 ஆயிரம் ஏக்கர் நிலத்தை  கரும்புச் செய்கைக்கு வழங்க முதலீட்டுச் சபையின் ஊடாக  ஜனாதிபதியினால்  அமைச்சரவைக்கு முன் மொழிந்து 2023-06-26ஆம் திகதிய அமைச்சரவையில்  அனுமதியினையும் பெற்று வழங்கி விட்டார். இதே அமைச்சரவை இடம்பெற்ற தினத்தில் இலங்கையில் தற்போது வனவளத் திணைக்களத்தின் பிடியில் உள்ள நிலங்களை 1985ஆம் ஆண்டு இத் திணைக்களத்திடமிருந்த நிலங்களை மட்டும் வைத்துக் கொண்டு எஞ்சியவற்றை விடுவிக்கும் பணிக்காக வரைபடம் தயாரிக்கவும்  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இங்கே வவுனியா வடக்கில் வனவளத் திணைக்களத்தின் பிடியில் மக்களிற்கு உரித்தான நிலம் உள்ளதாக பட்டியலிட்டு அவற்றை விடுவிக்குமாறு மாவட்டச் செயலகம் பரிந்துரைத்திருக்கும் நிலத்தின் அளவு  வெறுமனே 599 ஏக்கராக மட்டுமே உள்ளது. இந்த மக்களிடம் இருந்து பிடித்த நிலத்தை விடுவிப்பதற்கே 10 ஆண்டுகளாக வனவளத் திணைக்களம் மறுத்து வரும் நிலையில் வவுனியா வடக்கின் பெரும் வனப்பகுதி அழிக்கப்பட்டே இந்த கரும்புச் செய்கைக்கு நிலம் விடுவிக்கப்படவுள்ளமையும்  வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே வேறு எந்த நிலமும் இல்லை என்பதும்  மாவட்டச் செயலகம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  வழங்கிய இந்த  தரவுகளின் அடிப்படையில் முழுமையாக புலனாகின்றது. இவை அனைத்திற்பும் மேலாக 16 ஆயிரத்து 259 மக்கள் வாழும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே 200 சிங்கள மக்களும், 20 முஸ்லீம்களுமே வாழ்வதாக மாவட்டச் செயலகத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கும் நிலையில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி சபை உறிப்பினர்களே பணியாளர்களை பரிந்துரைப்பர் என்பது சரியானால் வவுனியா வடக்கு பிரதேச சபையிலே 26 உறுப்பினர்களில் 10 சிங்கள உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர. என்பதனையும் மாவட்டத்தில் இரு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதனையும் மறந்துவிட முடியாது. 74 ஆயிரம் ஏக்கர் நிலமும் வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் 10 இடங்களில் இந்த 30 ஆயிரம் கெக்டேயர் நிலமும் அடையாளமிடப்பட்டு 2023-05-11 ஆம் திகதிய கடிதம் மூரம் காணி ஆணையாளரினால் ஜனாதிபதியின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாகவும் அமைஞ்சரவைப் பத்திரத்திலே தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பின்பும் இத் திட்டம் தொடர்பில் எதுவுமே தெரியாது எனப் பலர் கூறுவதே இன்றைய வேடிக்கையாகவுள்ளது.
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image