இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான திருகோணமலையில் உள்ள குச்சவெலி காணி இன்று காலை சூரிய சக்தி திட்டத்திற்கு கையளிக்கப்பட்டது. இந்த நிலம் 270 ஏக்கரைக் கொண்டதாகும். இத்திட்டத்தின் மூலம் 100 மெகாவோட் சூரிய சக்தி உற்பத்தி செய்யப்படும். இது தொடர்பான கடிதம், 3W வலுசக்தி முகாமைத்துவ தனியார் கம்பனியின் தலைவர் மொஹமட் ஏ ஹுசைனிடம், கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவினால், கூட்டுத்தாபனத்தின் குமாரதுங்க அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முதலீட்டு பெறுமதி 150 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இத்திட்டத்தின் மூலம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு மாதாந்தம் 20 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். சொத்துக்களை திறமையாக நிர்வகிப்பதன் மூலம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மேம்படுத்த முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாட்டின் அபிவிருத்திக்கு வெளிநாட்டு முதலீடு அவசியமாகும். ஆனால் இதுவரை இலங்கைக்கு ஒரு மில்லியன் டொலர்களுக்கும் குறைவாகவே முதலீடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் முறையான வேலைத்திட்டத்தை பின்பற்றாதமையே இதற்கான காரணமாகும். தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஏற்றவாறான சூழலை உருவாக்கி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கூட்டுத்தாபனத்தினால் இவ்வாறான முதலீடுகளை அமுல்படுத்த முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன்; சமரசிங்க இதன் போது, தெரிவித்தார். நஷ்டத்தில் இயங்கும் கூட்டுத்தாபனத்தை மேம்படுத்த பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சமரசிங்க குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்ட கனடாவின் யுஅநசiஉயn ஊடநயn நுநெசபல ளுழடரவழைளெ நிறுவனத்தின் பொது முகாமையாளர் சைவியன் வியவ், இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளமை குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இந்த முதலீட்டுக்கு ஆதரவு வழங்கிய அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.