வடக்கு மற்றும் கிழக்கு தழுவிய ரீதியில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவுகோரி தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் நேற்று துண்டறிக்கை விநியோகத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் ’ரில்கோ’ விடுதியில் நேற்றுக்காலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடர்ந்து யாழ். நகரப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள், சந்தை என்பனவற்றினுள் துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது. ஹர்த்தாலுக்கு ஏன் ஆதரவளிக்கவேண்டும் என்று அச்சிடப்பட்ட துண்டறிக்கையே ஒவ்வொரு வர்த்தகர்களுக்கும், நகரில் நின்றிருந்த பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.
இதேவேளை சுன்னாகம் உள்ளிட்ட குடாநாட்டின் ஏனைய நகரப் பகுதிகளிலும் வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் நேற்று துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது.
இதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் ந.சிறிகாந்தா, செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், ரெலோவின் பேச்சாளர் கு.சுரேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வேந்தன், மாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.