துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு ஹிங்குரக்கொட விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. விமான நிலையத்தின் நிர்வாகம் மற்றும் நடவடிக்கைகள் தற்போது இலங்கை விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை சர்வதேச சிவில் விமான நிலையமாக மாற்றுவதன் மூலம் பொலன்னறுவை, அனுராதபுரம், சீகிரிய மற்றும் தம்புள்ளை பிரதேசங்களில் சுற்றுலாவை ஊக்குவிக்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்து, அந்நிய செலாவணியை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும் என அமைச்சர் தனது அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தெரிவித்தார். தற்போதுள்ள 287 மீற்றர் ஓடுபாதையை இரண்டாயிரத்து 800 மீற்றராக விரிவுபடுத்துதல், விமானநிலைய ஓடுபாதைக்கு, அமைவாக வீதிகளை அமைத்தல், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் மற்றும் விமான நிலையத்தில் பயணிகள் முனையம் அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.