13ஆவது திருத்தம் தொடர்பான புதிய செய்தியை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்து சென்னை திரும்பியுள்ள அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
‘இதற்கு முன் உலகின் எந்தத் தலைவர்களும் செல்லாத தூரத்தை மோடி இலங்கைக்குள் சென்றுள்ளார். 2015 ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் பிரதமர் மோடி இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டு பயணங்களும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவையாகும்;. இலங்கைத் தமிழர்களின் காயங்கள் மெல்ல மெல்ல ஆறி வருகின்றன. வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவடைந்துவிட்டன அல்லது முடியும் தறுவாயில் உள்ளன. 2015ஆம் ஆண்டு மோடியின் இலங்கைப் பயணம், முந்தைய இந்திய அரசாங்கத்தின் திறமையின்மைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, வளர்ச்சிக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான இந்தியாவின் நோக்கத்தை உறுதிப்படுத்தியது. வடமாகாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் காரைக்காலுக்கும் இடையில் படகுச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கப்பல் சேவைக்கான கேள்வி மனுக்கோரல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவத குறித்து இலங்கை ஜனாதிபதியிடம் கடிதம் மூலமும், உணர்வுபூர்வமாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். இந்த விடயம் தொடர்பான புதிய செய்திகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் வடமாகாண மக்கள் பெருமளவில் பயனடைவர். இதேவேளை, மோடியின் நடவடிக்கைகளின் விளைவே, இந்தப் பகுதியில் சீனாவின் செல்வாக்கு தணிந்திருப்பதற்கான காரணம்’ என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
TL