
கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 2020 மே 16ம் திகதி அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்ட கவிஞரும், ஆசிரியருமான அஹ்னாப் ஜசீம் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தினால் பயங்கரவாதிகளின் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் 16ம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்ட 27 வயதான எழுத்தாளரை பயங்கரவாதியாக நிரூபிப்பதற்கு ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் ஒழுங்குமுறை இல. 1-2012ன் கீழ்தான் இத்தகைய பயங்கரவாத பெயர்ப் பட்டியல் சமர்ப்பிக்கப்படுகிறது. ஒரு நபர் அல்லது ஒரு அமைப்பு உத்தியோக ரீதியில் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதாக அதிகாரிகளினால் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான சான்றுகள் இருந்தால் மாத்திரமே பெயர் குறிக்கப்பட்ட நபர்களின் பட்டியலாக ஐக்கிய நாடுகள் ஒழுங்குமுறைகளின் கீழ் அறிமுகப்படுத்தப்படும். பயங்கரவாத செயல்களில் ஈடுபடுதல், வசதிகள் வழங்குவதற்காக செயற்படுதல், அதற்காக முயற்சி செய்தல் என்ற காரணிகளை அதன்போது கவனத்தில் எடுத்தல் வேண்டும். மேலும் ஒரு நபரையோ, ஒரு அமைப்பையோ அவ்வாறு பெயர் குறிப்பிட்டதன் பின்பு, குறித்த நபருக்கு, குழுவிற்கு அல்லது நிறுவனத்திற்கு உரிய சகல நிதிகள், ஏனை நிதிச் சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்களை தடை செய்யும் உத்தரவை பிறப்பிக்க முடியும்.
பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் அவருக்கு எதிராக பயங்கரவாதத்திற்கு உதவி செய்தமை சம்பந்தமாக குற்றஞ்சாட்டி சுமார் 19 மாதங்கள் தடுத்து வைத்திருந்ததன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்பு புத்தளம் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கிலிருந்து கவிஞர் அஹ்னாப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
கவிஞர் அஹ்னாப் ஜசீம் வெளியிட்ட ‘நவரசம்’ சஞ்சிகையின் மூலம் தீவிரவாதத்தை பரப்புவதாக குற்றஞ்சாட்டி 2020 மே 16ம் திகதி; கைது செய்யப்பட்டார். தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட அவரது சஞ்சிகை பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்ட கருத்துக்களை கொண்டிருந்ததாக நிரூபிப்பதற்காக பயங்கரவாத விசாரணை அதிகாரிகளினால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கவிதை எந்தவொரு இலக்கிய அறிவும் இல்லாத ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டது. ஒரு வருடகாலம் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அஹ்னாப் 2021 மே 12ம் திகதி முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், குறித்த சஞ்சிகையில் உள்ள கவிதைகள் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் உலவ விட்டிருந்ததோடு, அந்த சஞ்சிகை தீவிரவாதத்தை பரப்பும் சஞ்சிகையல்ல என்பதை சிரேஷ்ட இலக்கியவாதிகளும், விமர்சகர்களும் காரணிகளுடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
Please enable JavaScript to view the comments powered by Disqus.