2021/2022 பெரும்போகத்தின் போது, பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்கு 657 மில்லியன் ரூபா இழப்பீடு

2021ஆம், 2022ஆம் பெரும்போகத்தின் போது பயிர்ச் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளின் இழப்பீடுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் 657 மில்லியன் ரூபாவை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்போகத்தின் போது, வறட்சி, வெள்ளம், காட்டு யானைகளால் ஏற்பட்ட பாதிப்புக்களை கருத்தில் கொண்டு இந்த இழப்பீடு வழங்கப்படுகிறது. அதன்படி, 31 ஆயிரத்து 613 விவசாயிகளுக்கு, 42 ஆயிரத்து 900 ஏக்கருக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
பிரதேச ரீதியில் அனுராதபுரம் மாவட்டத்தில் அதிகளவு இழப்பீடுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, 81 மில்லியன் ரூபா அனுராதபுரம் மாவட்டத்திற்கு வழங்கப்படும். பொலன்னறுவை மனம்பிட்டிய பிரதேசத்திற்கு 69 மில்லியன் ரூபாவும், மொனராகலையில் 68 மில்லியன் ரூபாவும் இழப்பீடாக வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, மொனராகலையில் சேனா கம்பளிப்பூச்சியினால் பயிர் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கான நட்டஈட்டை அடையாளப்படுத்தும் வகையில், புத்தல விவசாய சேவை நிலையத்தில் பத்து விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்துகொண்டார்.
