50 நகர்புற பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்பாடு

நாட்டில் 50 நகர்புற பிரதேசங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த நகர அபிவிருத்தித் திட்டம் விரைவில் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும். நகர்புற பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை பொருளாதார சமூக மற்றும் பௌதீக மட்டத்தில் அபிவிருத்தி செய்யும் வகையில் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபை எதிர்பார்த்துள்ளது. இதன்படி, ஏற்கனவே 25 நகர்புற பிரதேசங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஹக்மன, காலி, ரத்தினபுரி, எம்பிலிப்பிற்றிய, அனுராதபுரம், மிஹிந்தலை, பொலநறுவை, குருநாகல், மாகோ, கல்பிற்றி, கண்டி, எல்ல, பதுளை, கதிர்காமம், மன்னார், மொறட்டுவை, நீர்கொழும்பு, களனி, பியகம, களுத்துறை, பேருவல, நிந்தவூர். கந்தளாய், ஸ்ரீஜயவர்த்தன புர கோட்டே, தெஹிவளை, கல்கிசை ஆகிய நகரங்களே இவ்வாறு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. உள்ளுராட்சி மன்றங்களை உள்ளடக்கும் வகையில் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நகர்புற பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நகரங்களின் எண்ணிக்கை 136 ஆகும்.
