Home » IMF தீர்மானம் மீதான விவாதம் 26, 27, 28 ஆம் திகதிகளில்!

IMF தீர்மானம் மீதான விவாதம் 26, 27, 28 ஆம் திகதிகளில்!

Source
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்தை எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள நேற்று (20) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகப் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடிய போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கைப் பொருளாதார மீட்புக்கான விரைவான நிலைமாற்றத்தினை அடைவதற்காகவும் அதனைத் தொடர்ந்து இலங்கை மக்களுக்கும் எதிர்காலச் சந்ததியினர்களுக்கும் நலன் பயக்கும் நிலைபெறுதகு பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 3.0 பில்லியன் ஐ.அ. டொலர்கள் பெறுமதியான 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பான ஏற்பாடு 2023 மார்ச் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்குத் தேவைப்படுகின்ற சகல அங்கீகாரமும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டுமென இந்தத் தீர்மானத்தினால் முன்வைக்கப்படுவதுடன், மூன்று நாள் விவாதத்தைத் தொடர்ந்து தேவையேற்படின் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. பாராளுமன்றம் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கூடவுள்ளதுடன், இந்த ஒவ்வொரு நாளும் மு.ப. 9.30 முதல் மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஏப்ரல் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 மணி வரை குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2023.01.20 ஆம் திகதி 2317/28 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு வேளையின் போதான விவாதம் இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 26 ஆம் திகதி வாய்மூல விடைக்கான வினாக்களைத் தொடர்ந்து அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் 2023.04.17 ஆம் திகதிய 2328/02 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையை விவாதமின்றி அனுமதிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அதனையடுத்து பி.ப. 5.00 மணி வரை இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதன்பின்னர், அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள 13 பிரேரணைகள் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளன. மேலும் தனியார் உறுப்பினர் சட்டமூலங்களான களனி பௌத்த மகளிர் தருமச் சங்கம் (கூட்டிணைத்தல்) மற்றும் இலங்கை வரிவிதிப்பு நிருவாகம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றை இரண்டாம் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 மணி வரை முறையாக இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஏப்ரல் 27 ஆம் திகதி பி.ப. 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு வேளையின் போதான விவாதம் இடம்பெறும். ஏப்ரல் 28 ஆம் திகதி இடம்பெறும் விவாதத்தை அடுத்து உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. N.S
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image