Home » MUKAVARI 2022-01-13 22:49:36

MUKAVARI 2022-01-13 22:49:36

Source
 இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்துபவர்-களாலேயே ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தமுடியும். 21ஆம் நூற்றாண்டின் பிரதானமான ஏழு கடல்களுக்கு இந்து சமுத்திரமே மிக முக்கியமானது. “உலகினுடைய தலைவிதி என்பது இந்த சமுத்திரத்திலேயே
நிர்ணயிக்கப்படும் ”
என்று அமெரிக்காவின் முன்னால் ரியல் அட்மிரல் அல்பிரேட் தயார் மகான் தெரிவித்திருந்தார். வியூகவாதி மகான் 27 செப்ரம்பர் 1840இல் அமெரிக்கா நியூயோர்க் நகரில் மேற்கு முனையில் பிறந்தவராவார். இவரது கருத்துக்கள் டச்சு குடியரசு, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையே 17 ஆம் நூற்றாண்டு மோதல்கள் மற்றும் பிரான்ஸ் மற்றும் கிறேட் பிரிட்டன் இடையே பத்தொன்பதாம் நூற்றாண்டு கடற்படை போர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டது. பிரிட்டிஷ் கடற்படை மேன்மை இறுதியில் பிரான்சை தோற்கடித்தது, தொடர்ந்து படையெடுப்பு மற்றும் பயனுள்ள முற்றுகையைத் தடுத்தது. கடற்படை நடவடிக்கைகள் முக்கியமாக தீர்க்கமான போர்கள் மற்றும் முற்றுகைகளால் வெல்லப்பட வேண்டும் என்று மகான் வலியுறுத்தியவராவார். 

        இலங்கைத் தீவினுடைய கேந்திர முக்கியத்துவம் என்பது இந்து சமுத்திரத்திலும், ஆசியாவிலும் அமைந்திருப்பதால் இரட்டிப்புப்  பெறுமதியடைகிறது. வரலாற்றுரீதியாக, இந்து சமுத்திரம் உலக அரசியலில் ஒரு தனித்துவமான மூலோபாய மற்றும் முக்கியமான பிராந்தியமாக இருந்து வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு மையமாக இருக்கும் அதேவேளையில், வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் மூலம் இப்பகுதி எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வுகள் மூலம் அறிந்து கொள்ளமுடியும். உலகில் வர்த்தக ஆதிக்கப் போட்டியில் சீன வல்லரசு அமைக்கும்  பட்டுப்பாதையானது சர்வதேச வல்லரசுகளுக்குப் பெருஞ்சவாலாகவே அமைகிறது. சீனவல்லரசு வியூகமிட்டு இந்தியாவினைச் சுற்றியுள்ள நாடுகளைத் தன் கைப்பிடிக்குள் கொண்டுவருகிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. அதேவியூகமே சிறீலங்கா–சீன உறவும் அமைகிறது. சமநேரத்தில் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கும், வர்த்தக நலன்களுக்காகவும் சிறீலங்காவுடன் நட்புறவு பாராட்டுவதும், சிறீலங்கா இந்தியாவை விட்டு தூரவிலக முயலும் போதெல்லாம் இந்தியா கையில் எடுக்கும் கருவி தமிழர் விவகாரம். சிலசமயங்களில் தமிழ் மக்களுக்குச் சார்பாகவும், இன்னும் சில சந்தர்ப்பங்களில் எதிராகவும் அதனை கையாள்வதுமே ஒரு தொடர்கதையாக எழுதாத ஆனால் மாறாத விதியாக நடைபெறுகிறது. 

திருகோணமலையிலுள்ள எண்ணெய்த் தாங்கிகள் அமெரிக்காவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அதையண்டி 3,000 ஏக்கர் நிலம் அபிவிருத்திப் பணிகளுக்காக வழங்கப்படவுள்ளமை, கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீதப்பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்படவும், இலங்கையின் எரிவாயு விநியோகத்தையும் அதே நிறுவனத்துக்கு வழங்கவும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்படாமலே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என தற்சமயம் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையே உருவாகிவரும் நெருக்கம், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தை அமெரிக்கா இந்தியாவைப் புறமொதுக்கி விட்டு நேரடியாக கையாள முயலுதல், தெற்கு, மேற்கு என இலங்கையில் காலூன்றிய  சீன வல்லரசு வடக்கில் காலூன்றுவதற்கான முன் முயற்சிகளில் இறங்கியமை போன்ற விடயங்கள் இந்தியாவை இலங்கை தமிழர் விவகாரத்தில் அக்கறை காட்டவைத்துள்ளன.

      இவற்றை எல்லாம் வைத்து தமிழ் மக்களுக்கு ஒரு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்று கருதுவது அறிவுடமையாகாது. சர்வதேச நாடுகள் எதுவாயினும் இலங்கையில் தமிழர்கள் பிரச்சைனையை நியாhயத்தின் அடிப்படையிலோ அல்லது அனுதாபங்கொண்டோ அணுகுவது கிடையாது. அந்தந்த நாடுகள் தங்கள் பிராந்திய, பூகோள, வர்த்தக நலன்களுக்கு ஏற்ற வகையில் ஈழத்தமிழர்களது பிரச்னைகளைக் கையாள்கின்றனர். இலங்கைத் தீவினுடைய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தன்மை, சர்வதேச சக்திகளின் நலன்களை பூர்த்தி செய்வதற்கான ஒரு வடிகாலாக இருந்து வருகிறது. இதன் நிமிர்த்தமே இலங்கைத் தீவில் ஒரு உறுதித்தன்மை ஏற்பட வேண்டும் என்பதில் சர்வதேச சக்திகள் கவனம் செலுத்தி வருகின்றன. 

இவ்விடத்தில் சாணக்கியத்துடன் தமிழினத் தலைவர்கள் என்று கருதப்படும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஒற்றுமையுடன், ஒருமித்த கருத்துடன் மாறாத உறுதியுடன் சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளல் அவசியம் என்பதே  அரசியலாய்வாளர்களின் கருத்தாகக் காணப்படுகிறது. 

வரலாற்றில் தமிழர்களால் தமது தலைநகரம் என்று எப்பொழுதும் திருகோணமலை கொண்டாடப்பட்டு வருகிறது. இதே தலைநகரம் இன்று சிங்களக் குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு தேர்தல்கள் மூலம் சிங்களவர்களின் ஆட்சி அதிகாரத்தினுள் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

அதேவேளை திருகோணமலையில் சிறீலங்காவின் கட்டுப்பாட்டில் இல்லாது ஒருபெரும் நிலப்பரப்பு எதோவொரு வகையில் இந்தியாவின் பிடியினுள்ளும் இருக்கிறது. இதனைக் கடந்த வாரக் கட்டுரையில் குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.  

“முன்னுக்குப்பின் முரணாக அறிக்கைவிடும் வலுச்சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின்   இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த திருகோணமலை எண்ணெய்க் களஞ்சிய நிலையத்தை மீண்டும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளமை எமக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும்” என்ற கூற்றும் அதே அறிக்கையில் “ஜனவரி மாதம் 12 ஆம் திகதி திருகோணமலை எண்ணெய்க் களஞ்சிய நிலையத்தில் இலங்கைக் கொடியைப் பறக்கவிடுவோம்” என இன்று இலங்கை விவகாரத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அண்மைய நாட்களாக பரபரப்பாகப் பேசப்படும் பிரச்சினையாகவே இருந்து வருகின்றது. தமிழர் தலைவிதியை நிர்ணயிக்கும்; கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தமிழர் தலைநகர் திரிகோணமலை  ஒரு சிறந்த வரலாற்றைக் கொண்டது. இதன்  இயற்கை ஆழமான கடற்துறைமுகம் கேந்திர வலுவை மேலும் அதிகரிக்கிறது. இதன் முக்கியத்துவத்தையும் நம் கற்பனைக்கு அப்பால் நாம் ஊகித்து அறியமுடியாத விடயங்கள் பலவற்றையும் ஓரளவு தெளிவுகொள்ள எண்ணெய் தாங்கிகளின் வரலாறு மட்டுமல்லாது, திருகோணமலையின் வரலாற்றையும் மீளப்பார்ப்பது அவசியம். 

போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரித்தனியார் என பல்வேறு தரப்புக்களால், காலத்துக்குக் காலம் வெவ்வேறு தரப்பினரால் ஆளுகைக்குட்படுத்தப்பட்ட இலுங்கைத் தீவானது, அதனுடைய சுதந்திரத்தோடு தனது வராலாற்றை இன்னொரு அத்தியாயத்துக்கு நுழைத்துக்கொண்டது. அந்த நுழைவு, தேசிய பாதுகாப்பு, இறைமை மற்றும் ஆட்புல ஓருமைப்பாடு போன்ற காரணங்களை காட்டி தனது தேசத்து மக்களையே அடக்குமுறைக்குட்படுத்த தொடங்கியது. அந்த அடக்குமுறை வடிவத்தையும், அதன் விளைவுகளும் தமிழ் மக்களை கடும் அவல வாழ்வுக்குள் தள்ளியது. அந்த இருள்படிந்த வரலாற்றின் சாட்சியாக இன்று மீளாக்கடனில் ஆறாத்துயரில் பெரும் சிக்கல்களுக்குள்  நிகழ்காலம் அலங்கோலமாக காட்சி தருகிறது. இருப்பினும், நிகழ்காலத்தின் பல சதுரங்க காய் நகர்த்தல்களில் சர்வதேச சக்திகளின் வகிபாகமும் அதன் இயக்கவியலும் தமிழ் தேசிய தரப்புகளால் சரிவர எடைபோடப்பட்டு அதற்கேற்ற வகையில் காய்கள் நகர்த்தப்படவில்லை. தமிழர்கள் தலைநிமிர வேண்டும் எனில் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்து சாதகமான சூழ்நிலையில் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடாது சரியான வியூகத்துடன் பிராந்திய அரசியலை தமிழர் தரப்பு கையாள வேண்டும். தமிழ் தரப்புகள் சுயநலம் களைந்து, கருத்தொருமித்த ஐக்கியத்துடன் உறுதியுடன் விசுவாசத்துடன் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வழிவகுக்க வேண்டும்.


கேந்திர முக்கியத்துவத்தையும், பிராந்திய அரசியலையும் தந்திரோபாயமாகக் கையாள தமிழர் தரப்பு தவறினாலும் இந்தியாவின் பாதுகாப்பையும் இந்திய-மேற்குலக கூட்டின் ஆதிக்கத்தையும் வலுப்படுத்த இலங்கை பிரிக்கப்பட்டு சுதந்திரமற்ற ஒரு தனிநாடு  உருவாக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாத களச்சூழ்நிலையும் காணப்படுகிறது. 

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image