Home » MUKAVARI 2022-02-03 05:06:49

MUKAVARI 2022-02-03 05:06:49

Source

இலங்கையின் 74 ஆவது சுதந்திரநாளை வலுகோலாகலமாக கொண்டாடுகிறது பௌத்த சிங்களப் பேரினவாத ஸ்ரீலங்கா அரசு. சுதந்திரத்தை வழங்கிய பிரித்தானிய அரசு இனமுரண்பாடுகளை உள்ளே வைத்து தைத்தே வழங்கியமையானது, எதிர்காலத்தில் இலங்கை அரசினைத் தங்கள் கைக்குள் வைத்திருப்பதற்கான பிரித்தாளும் பிரித்தானியாவின் சூழ்ச்சி என்றால் மிகையாகாது.

தங்களுக்கு சார்பான ஆட்சியாளர்களை உருவாக்குவதன் மூலம் தங்கள் மேலாதிக்கத்தை தக்கவைப்பது என்பது உலக அரசியலில் ஒருவகை ராசதந்திர நகர்வு. இவ்வாறே ரஷ்யாவும் யுக்ரைனில் தன் சார்பான ஒரு பொம்மை ஆட்சியாளரை ஆட்சியில் அமர்த்த முற்படுகிறது. அதுபோலவே மேற்குலகம் இலங்கையில் தமக்கு சார்பான ஒரு ஆட்சியாளர்களை ஆட்சிக்கட்டில் ஏற்ற முயற்சிக்கிறது.

அன்று தமிழ் இளைஞர்கள் கையில் ஆயுதங்களைத் கொடுத்து இந்தியா ஊக்குவித்தது என்பது தமிழர்கள் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அல்ல மாறாக இலங்கையின் ஆட்சியாளர்களைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு என்பதைனை தமிழனம் இன்று நன்குணர்ந்துவிட்டது. தமிழ்நாட்டு தமிழர்களது அன்பும் ஆதரவும் தமிழர் நலனில் அவர்கள் கொண்ட அக்கறையும்  இந்திய மத்திய அரசிடம் இருந்து தமிழர்கள் நாங்கள் எதிர்பார்ப்பது மடமை என்பதை நமக்கு உணர்த்தும் முகமாக உணவுப்பொதிகளை விமானத்தில் தாழப்பறந்து வீசியதும் தொடர்ந்து இந்தியா அமைதி காக்கும் படை எனும் பெயரில் வந்து தமிழர் நிலத்தை ஆக்கிரமித்ததும், இந்தோ-லங்கா ஒப்பந்தத்தை உருவாக்கியதும் தனது கட்டுக்குள் இலங்கையை கொண்டுவர சிங்களப் பேரினவாதிகளுடன் நட்புப் பேணுகின்றமையும் விளங்குகிறது. 

     இவ்வாறாக இந்திய அரசின் பூகோள தேசிய நலன்களும், அதன் பிராந்திய மேலாதிக்க வெறியும் அவர்களது நிலைப்பாடும் தமிழர்கள் நலனைப்பற்றி சிறிதும் அக்கறை காட்டாவில்லை. மாறாக தமிழர் விவகாரத்தை தம் நலன்களுக்காக பயன்படுத்தும் போக்கினாலும் தமிழர்களுக்குத் தொடர்ந்து துரோகத்தையே செய்கிறது. 

இலங்கைத் தீவில் பாதுகாப்பாக சுதந்திரமாக தமிழர்கள் வாழ ஒரே வழி “தமிழீழத் தனியரசு” ஒன்று மூலமே சாத்தியமாகும். இதனையே அகிம்சைப் போரட்டத்தில் ஈடுபட்ட தந்தை செல்வா தலமையிலான தமிழ் தலைவர்களின் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் அதற்கான மக்கள் ஆணையும் எடுத்தியம்பின. அதனையே ஆயுதம் ஏந்திய போராளிகளும் கடைப்பிடித்தனர். அதனடிப்படையிலேயே தனியரசை அமைப்பதற்கான விடுதலைப் போராட்டமும் எழுச்சியுற்றது. இந்தியவோ எழுச்சியுற்ற இந்த விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதிலேயே கருத்திற் கொண்டது. ஆயுதம் தாங்கி திடமான கொள்கை உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்கள் மூலம் தலைமை தாங்கி இந்த விடுதலைப் போராட்டத்தை வழிநடாத்திய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்தியா ஒடுக்கி, தேசியத் தலைவரை கொல்ல நினைத்தது. அதனால்தான் வந்திறங்கிய இந்திய அமைதிப்படை ஒரு லட்சம் கைவிலங்குகளுடனேயே அன்று வந்திறங்கியது. இன்று 2009 இல் இலங்கையுடன் கைகோர்த்து தமிழர்களின் தனித்துவம் மிக்க விலைபோகாத் தலமையையும், விடுதலைப் போராட்டத்தையும் அழித்தொழித்து தமிழர்களை அரசியல் அநாதைகள் ஆக்கியது. 

இதற்குக் காரணம், தமிழீழ விடுதலை போராட்டத்தின் மூலம், ஈழுத்தமிழர்கள் மத்தியில் வளர்ந்துவரும் தமிழ்த் தேசிய எழுச்சியினைக் கண்ணுற்ற இந்திய அரசு அஞ்சத் தொடங்கியது. இந்தத் தமிழ்த் தேசியம் வளர்ந்து முதிர்ச்சி பெற்று தமிழீழம் அமையுமானால், அது தமிழ்நாட்டிலும் தன்னாட்சி கோரிக்கைக்கு புத்துயிர் கொடுத்துவிடும் என இந்திய அரசு மிரட்சியடையத் தொடங்கியது. அத்துடன் இந்தத் தேசிய விடுதலைப் போரட்டம் வெற்றிபெறுமாயின், இந்திய உபகண்டத்தில் இருக்கும் ஏனைய தேசியஇனங்களின் மத்தியில் தேசிய இன உணர்ச்சிகளை தோற்றுவித்து இந்திய சாம்ராச்சியத்திற்கே ஆபத்தை உண்டாக்கி விடும் எனவும் இந்திய அரசு கலங்கத்தொடங்கியது. 

இலங்கைத்தீவில் ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் ஒரு அரசியல் உறுதிப்பாடு இருக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு கடும் அக்கறையாக இருப்பதன் காரணம் இலங்கைத்தீவில் அரசியல் உறுதிப்பாடு இல்லாவிடின் இதைச்சாட்டாக வைத்து உலக வல்லரசுகள் தலையீடுகளைச் செய்யும் எனவும் அத்தலையீடுகள் இந்திய அரசின் பிராந்திய பூகோள அரசியல் நலனுக்களுக்கு அச்சுறுத்தல்களைக் கொடுக்கும் எனவும் இந்திய அரசு எண்ணியமை ஆகும். இந்த அச்சத்தின் அடிப்படையில்தான் இந்திய அரசு இலங்கையுடன் நட்புப்பாராட்டுவதும், பல்வேறு பரிமாணங்களில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தொடர்ச்சியான வகிபாகமும் இருந்து வருகிறது. 

அன்று 1987 இல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பொழுது பூகோள அரசியிலில் இந்தியாவுக்கு எதிரியாக விளங்கிய அமெரிக்கா இன்று இந்தியாவின் உறவுநாடாக விளங்குகின்றது. வெளியுறவுக்கொள்கைகளிலும் பெரும் மாற்றங்களைச் செய்த இந்தியா உள்நாட்டுச் சந்தையையும் திறந்துவிட்டு, பொருளாதார உடன்படிக்கைகள், கூட்டு இராணுவ ஒத்திகைகள் என நடத்தி வருகிறது. இந்தியா அன்று எந்தப் பிராந்திய வல்லரசுகளுக்கு பயந்ததோ, இன்று அதே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன்; கைகோர்த்து தலைகீழாக வெளியுறவுக் கொள்கையினைக் கடைப்பிடிக்கிறது.   அதேபோல் தமிழர்கள் விவகாரத்தில் தேவையற்ற அச்சங்களை தவிர்த்து  தமிழ் மக்கள் விடுதலைப்போரட்டத்திலும் தமிழர்கள் நலனிலும் செயற்படும் வகையில் இந்தியாவின் நிலைப்பாட்டில், கொள்கையில் ஒரு மாற்றம் வேண்டும். 

1987 இல் உருவாக்கப் பட்ட ஒப்பந்தத்தமும் அதிலுள்ள 13 ஆந்திருத்தச் சட்டமும் இலங்கை விவகாரத்தில் இந்தியா எப்பொழுதும் தலையிடககூடிய ஒரு பொறியாகும். அதனை ஒரு தமிழர் தரப்பு இந்தியாவிடம் கோரிக்கையாக ஒப்படைத்திருப்பதும், இன்னுமோர் பகுதி அதை எதிர்ப்பதும் சரிபிழைகளுக்கு அப்பால் சாமர்த்தியமான செயல்களாகவே கருதப்படவேண்டியுள்ளது. எவ்வளவுதான் நட்பாக இருந்தாலும் பூகோள கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இந்தியா தன்னாதிக்கத்தையே நிலை நாட்ட விரும்பும். 13 ஆந்திருத்தச்சட்டத்தை நிராகரிக்கும் தமிழர்கள் முன்வைக்கும் “ஒரு நாடு இரு தேசம்” எனும் கருத்தாக்கம் வலுவூட்டப்படவேண்டிய ஒன்றாக இருப்பினும் இதுவும் இந்தியாவின் எண்ணம் போல் இலங்கையில் அரசியல் உறுதிப்பாட்டை வலுவாக்கும். ஆனால் நட்பே இல்லாத கபளீகர வர்த்தகச் சீனாவோடு தேன்நிலவு கொண்டாடும் சிங்கள அரசியல்வாதிகள் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கோசத்தோடு செயற்படுத்த முயலும் அரசியல் யாப்பின் மாற்றமானது ஏற்படுத்தக்கூடிய விபரீதங்களை உய்த்தறியும் வல்லமையுள்ள இந்தியா நிச்சயமாக அதன் நிலைப்பாட்டில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்க வேண்டியே வரும். 

பகைமைக் கண்களினுடனேயே தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பார்ப்பதை இந்தியா கைவிட வேண்டும். ஈழத்தமிழர்கள் விரும்பும் தன்னாட்சிக் கோரிக்கை என்பது அம்மக்கள் வாழ்ந்த புறச்சூழலால் உருவான போராட்டமாகும். இச்சூழல் தமிழ்நாட்டில் இல்லை. எனவே ஈழத்தில் நடந்தது போன்ற ஒரு ஆயுதப்போராட்டமோ அல்லது தன்னாட்சிக் கோரிக்கை போராட்டமோ நடத்தவேண்டிய புறச்சூழ்நிலை தமிழ்நாட்டில் இல்லை. 

ஈழத்திலோ இனப்படுகொலையினாலே தமிழர்கள் அழிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே இன்றும் தமிழினம் சிறை வைக்கப்பட்டுள்ளது. ஈழமக்கள் இன அழிப்பில் இருந்து தம்மை பாதுகாப்பதற்கான வரலாற்றுத் தேவையும், அவசியமும் எழுந்தமையினால்தான் ஆயுதம் ஏந்திப்போராட முற்பட்டனர். அவ்வாறாகப் பாதுகாக்கப் போரடிய போராட்டம் அழிக்கப்பட்டு, திட்டமிட்ட இனஅழிப்பின் விளிம்பில் ஈழத்தில் தமிழினமே அழிந்துவிடும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில், தொடர்ந்து இந்தியா இலங்கைக்குத் துணைபோவது என்பது இந்தியாவினுடைய தவறான கண்ணோட்டத்தினால் செய்யும் அநியாயமாகும். 

ஈழத் தமிழர்களினுடைய உரிமைப்போராட்டம் என்பது தனித்துவமான வரலாற்று நிர்ப்பந்தங்களினால் இன அழிப்பில் இருந்து முற்றாகத் தம்மைக் காப்பாற்ற தன்னாட்சியைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலையில் மலர்ந்ததாகும். இப்போராட்டத்தை இந்திய அரசு தமது உள்நாட்டுப் பிரிவினைவாதங்களுடன் ஒப்பிடுவதும், அதனால் தனது தேசிய நலனுக்கும் ஆபத்து ஏற்படும் என்று கருதுவதும் அதன் அர்த்தமற்ற தவறான குருட்டுப் பார்வையினாலே ஆகும்.  

இந்தத் தவறான கண்ணோட்டத்தின் காரணமாக எமக்காகப் போராடிய எமது விடுதலைப்போராளிகளை அழித்ததோடு மட்டுமல்லாது இனவெறிகொண்ட சிங்கள இனவாத அரசு நடத்திய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் இந்தியா தெரிந்தோ தெரியாமலோ  துணை போனது. 

மாறிவரும் நவீன உலகில் தேசிய சுதந்திரம் பெற்ற எத்தனையோ புதியநாடுகள் உருவாகியுள்ளன. ஒரு பொதுசன வாக்கெடுப்பு இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் நடைபெறுமென்றால் அங்கு மக்களின் தீர்ப்பாக ஒரு புதிய நாடு உருவாகவும் வாய்ப்புண்டு. தமிழீழ அரசு அமைவது இந்திய தேசிய நலனுக்கோ அல்லது அதன் பிரதேச பூகோள நலனுக்கோ எந்த வித அச்சுறுத்தலாகவும் அமையாது. ஏனென்றால் ஈழத்தமிழர்கள் ஒருபொழுதும் இந்திய நலனுக்கெதிரான கொள்கையுடையவர்கள் அல்லர். இந்தியாவின் சம்ராஜ்யத்திற்கு பக்கபலமாகவே விளங்குவார்கள். இதன் அடிப்படையில் தமிழீழம் தொடர்பான தனது வெளியுறவுக் கொள்iகையை இந்திய அரசு மாற்றியமைத்து தமழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் தீர்வுக்கு ஆதரவளிக்குமாயின் சுதந்திர இந்தியாவின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவல்ல ஒரு சுதந்திர தமிழீழத் தாயகம் மலரும், அந்நாளே ஈழத்தமிழர்களின் சுதந்திர நாளாக ஒளிரும்!

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image