Home » MUKAVARI 2022-02-10 05:00:00

MUKAVARI 2022-02-10 05:00:00

Source

 இந்திய அரசின் தமிழின விரோத போக்கும், 
ஈழத்தமிழர்களின் இந்தியா ஆதரவுப்போக்கும்! 

- முகுந்தமுரளி                                          

இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பிரித்தானியர்கள் வெளியேறிய நேரத்தில் இந்த பிராந்தியத்தின் மக்கள்தொகை அமைப்பு இந்திய ஒன்றியத்திற்கு மிகவும் சாதகமாக இருந்தது. தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் எனும் இனக்குழுக்களின் தாயகமான இலங்கைத் தீவு இந்திய துணைக் கண்டத்தின் தென் முனைக்கு அருகிலிருந்தாலும், இவ்விரு இனங்களில் தமிழர்கள் இந்திய ஒன்றியத்தின் மீது மிகுந்த ஆதரவாக இருந்த போதும், சிங்களவர்கள் எப்போதும் இந்தியா பற்றிய அச்ச உணர்வையே தம்முள் கொண்டிருந்தனர். இப்புறச் சூழ்நிலையில் பிரித்தானியர்கள் இனமுரண்பாடுகளை நிரந்தரமாக வைப்பதன் மூலம் தங்கள் கைப்பிடிக்குள் அப்பிராந்திய அரசியலைத்; தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ஏதுவாக சிங்களர்கள் கையில் சுதந்திரத்தை வழங்கித் தமிழர்களை இருளில் தள்ளினர். தங்களைப் எப்பொழுதும் பகையாளிகளாகப் பார்க்கின்ற சிங்களர்களைப் பங்காளிகளாகப் பார்க்கின்ற இந்திய அரசு, எப்பொழுதும் இந்தியா ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் தமிழர்களை தங்கள் ராசதந்திர நடவடிக்கைகளுக்காக மட்டும் வெறும் பகடைகளாகவே பயன்படுத்தி வருகின்றது.  

     இந்திய ஒன்றியத்தின் வெளியுறவுக்கொள்கையில் ஆழமாக வேரூன்றியிருக்கும் தமிழின விரோதப் போக்கும், இனவாத நோக்கின் காரணமாக விவேகமற்ற முறையில் செயற்படுத்தப்பட்டு இலங்கை விடயத்தில் தொடர் ராசதந்திர தோல்விகளையே இந்தியாவிற்கு வழங்கிவருகிறது. இவ்வேளையில் இலங்கையில்; இந்திய ஆதரவு நிலைப்பாட்டில் ஆறு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியாவிடம் தமது கோரிக்கைளை கையளித்துள்ளன. இவர்களுடைய முயற்சிகள் கூட இந்திய நிகழ்ச்சி நிரலின் கீழ்தான் ஒழுங்கமைக்கப்பட்டது எனும் ஒரு பார்வையும் பொதுவாக உண்டு. 

ஆறுகட்சிகள் ஒன்றிணைந்து இந்தியாவை நோக்கிச் செயற்படுவதால் அவர்கள் துரோகிகள், இந்தியாவின் அடிவருடிகள் என்றும் இனத்துரோகிகள் என்று முத்திரை குத்துவதும், தங்களது அரசியலின் சரிபிழையை யாராவது சரியான அரசியல் கண்ணோட்டத்தில் விமர்சித்தால் அவர்களுக்கும் துரோக முத்திரை குத்துவதும் சமூக ஊடகங்களினூடாக அவற்றைப் பரப்புவதுமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணனி செயற்படுவதானது தருணம் பார்த்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் தமது கட்சிதான் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கையை முன்னெடுக்கின்ற கட்சி என்று கூறுவதும் மற்றவர்களுக்கு துரோகிப்பட்டங்கள் சூட்டுவதும் தங்கள் கட்சியை தேர்தல் அரசியலை முன்னிட்டு நிலைநாட்டும் சுயலாப நோக்கேயன்றி தமிழர்கள் விடுதலை நோக்கிச் செயற்படும் செயற்பாடுகள் அல்ல என்றும் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கிறனர். 

ஆறாந்திருத்தச் சட்டத்தின் கீழ் சத்தியப்பிரமாணம் எடுத்து பதவி வகிக்கும் பொழுது, போக்குவரத்துச் செலவு, அலுவலகச் செலவுக்கென அரசசலுகைகளைக் கோரி அரச பணத்தினையும் பெற்றுக்கொண்டு நாங்கள் மட்டும்தான் விடுதலைப்புலிகளின் கொள்கையைப் பின்பற்றுகிறோம் என்று இவர்கள் பேசுவது அபத்தமானது.                                                                    

தமிழீழ விடுதலைப்புலிகள் “விடுதலை அரசியலில் இருக்கும் நாங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடப் போவதில்லை” என்னும் உறுதியான கொள்கை நிலைப்பாட்டில் இருந்தவர்கள். ஆனால் இன்று தேர்தல் அரசியலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் தாங்கள் மட்டும்தான் விடுதலைப்புலிகளின் கொள்கையைக் காப்பவர்கள் என்று கூறுவதும் வேடிக்கைக்குரிய ஒரு விடயமாகும். 

அதேபோல் 2009 இன் பின் 12 வருடங்களாக அரசியல் செய்துவரும் இந்த ஆறுகட்சிகளும் அவர்களின் போக்கும் விமர்சனத்திற்குரியவையாக இருப்பினும் நிரந்தரமாக தமிழர் அரசியல் இருப்பை அழிக்க முற்படும் புதிய யாப்பு உருவாக்கத்தை எதிர்ப்பதற்கு எடுத்த 13ஆந் திருத்தச்சட்டம் என்பது ஓர் ஆரம்பப் படியே தவிர அது தமிழர்களுக்கான நிரந்தர அரசியற் தீர்வல்ல என்பதை நன்கறிவர். 

ஏனெனில் பௌத்த சிங்கள பேரினவாதத்தினால் தமிழர்களை கோட்பாட்டு ரீதியாகத் தோற்கடிப்பதற்கான யாப்பு ஒன்று உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், நடைமுறையில் உள்ள மாகாணசபை நிர்வாக அலகுகள் இல்லாமலாக்கப்படப் போகின்றது. சிலவேளைகளில் இன்று இரண்டாந்தர நிருவாக அலகுகளாக விளங்கும் மாவட்ட நிர்வாக அலகுகள் முதன்மைப் படுத்தப்படக்கூடும். தமிழர்களின் தாயகக் கோரிக்கையை சிதறடிக்கும் முகமாக  தமிழர்களின் கையில் இருக்கின்ற நிர்வாகங்கள் கூட சிங்களவர்களின் அல்லது முஸ்லீம்களின் கைகளில் சென்றடையும் வாய்ப்புக்களும் இதனால் உருவாகும். 

இதனைத் தடுப்பதற்கு தமிழர்கள் எங்களிடம் முன்னேற்பாடு ஏதாவது இருக்கின்றதா? யாப்பு உருவாக்கத்தில் தமிழர்களும் பங்குபற்றுகின்றார்களா? தமிழர்களுக்கு எதிராக அவர்கள் அரசியல் இருப்பை இல்லாமல் ஆக்கப்போகும் இந்த அரசியல் யாப்பைத் தடுப்பதற்கு முன்னேற்பாடுகள் தமிழர்களிடம் உள்ளதா? எனும் கேள்விகள் நிறைந்த இச்சந்தர்ப்பத்தில் ஆறுகட்சிகள் கூட்டுச் சேர்ந்ததும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்திலுள்ள 13 ஆந்திருத்தச் சட்டத்தை அதிகாரப்பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்த இந்தியாவை நாடியதென்பதும் விவேகமான செயல் என்று கருதப்பட்டாலும் தமிழர் நலன் பற்றியே சிந்தியா  இந்தியாவை சந்தேகக் கணகள் கொண்டே தமிழர் நாம் நோக்க வேண்டியுள்ளது. 

இலங்கையில் இருந்து தமிழ்த் தோட்டத்தொழிலாளிகள் வெளியேற்றப்பட, இந்திய தரப்பு இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்றால் என்ன, 1987 இந்திய-இலங்கைப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்றால் என்ன சிங்களத்துடன் நட்புறவைப் பேணும் வண்ணமே உருவாக்கப்பட்டன. இலங்கையில் தமிழனம் அழிக்கப்பட்ட உச்சக்கட்ட வேளையிலும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது இந்தியா. இந்த இந்தியா, இலங்கையில் மட்டுமல்ல பர்மாவில் இருந்தும் பர்மாவின் சர்வாதிகாரம் அங்கு செல்வவசதி வளத்துடனும், காணிநிலத்துடனும் வாழ்ந்த தமிழர்களைத் தாக்கி நாட்டை விட்டு வெளியேற்றியபோது, எதுவித தயக்கமுமின்றி அவலத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து நின்றது. அதேபோல் திட்டமிட்ட முறையில் இலங்கையில் நடக்கும் தமிழ் இனவழிப்பை அறிந்தும் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் போதும் இந்தியா வாய்மூடி மௌனமாக இருந்தது மட்டுமின்றி, தமிழர்களுக்கு பாதுகாவலர்களாக இருந்த விடுதலைப்போராளிகளை அடியோடு அழிப்பதிலும், அதைத் தொடர்ந்து தீவில் நடைமுறையில் உள்ள தமிழ்த் தேசிய அரசை அழிப்பதிலும், தமிழர் அரசியல் இருப்பை புறக்கணித்து சிங்கள அரசிற்கு உரமூட்டியது. 


அவ்வாறிருந்தும் இன்றும் தமிழர்கள் இந்தியாவை நோக்கி கூட்டுக் கோரிக்கை வைத்ததன் விளைவாக அது முக்கியமான மாற்றம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. ஆம் இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட அவர்களின் கூற்றுப்படி இலங்கை இந்தியாவுடன் ஒரு மூலோபாயக் கூட்டு ஒன்றினை வைத்திருப்பதாகவும், இது பொருளாதார ரீதியான மூலோபாய உறவு என்றும், சரிந்துபோன இலங்கையின் பொருளாதாரத்தை இந்தியப் பொருளாதாரத்துடன் இணைப்பது என்பது அதனுடைய கருவாகும் என்கிறார். எரிசக்தி, மின்சாரம், துறைமுகங்கள், தகவல் துறை, தொழில்நுட்பம், உல்லாசப் பயணத்துறை, பெருந்தோட்ட துறை, நெடுஞ்சாலைகள் போன்ற எட்டுத்துறைகள் இவற்றில் அடக்கம். இது பார்வைக்கு பொருளாதார உறவுபோல் பட்டாலும் அரசியல் பார்வையில் பொருளாதார ஆதிக்கத்தின் மூலம் அரசியல் அதிகாரத்தை  இந்தியா கைப்பற்றும் வாய்ப்பைக் கொடுக்கின்ற இந்த மூலோபாயக் கூட்டு உடன்பாடு என்பது புதிய அரசியல் யாப்பை அரங்கேற்றும் வரை சிங்கள ராசதந்திரம் இந்தியாவை சாந்தப்படுத்தி காலங்கடத்த எடுக்கும் முயற்சியாகவும் இருக்கலாம். 


“இலங்கையில் ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இந்தியாவிடம் இருந்து எந்தவிதமான அழுத்தங்களும் இல்லை என  சிறீலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அண்மைய  டில்லிப்பயணத்தின் போது தெரித்துவிட்டு டில்லியில் சந்திப்புக்களை நிகழ்த்திவிட்டு நாடு திரும்பிய, அதேவேளை இந்தியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இலங்கைக்குரிய நல்லிணக்க செயற்பாட்டில் தமிழ் மக்களுக்குரிய அதிகாரப் பகிர்வு முக்கியமான அம்சம் என்பதை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சிறீலங்காத் தரப்புக்கு கூறியதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கியமான இலங்கைக்குள் சமத்துவம் நீதி சமாதானம் மற்றும் மரியாதையை உறுதி செய்வதன் மூலம்தான் இலங்கைத் தீவு முன்னோக்கி நகரும் என்பதால் இவ்வாறான திட்டங்களை விரைவாக முன்னெடுத்துச் செல்லுமாறும் தமது தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சரகம் குறிப்பிடுகின்றது. 

விடாக்கண்டனாக தாம்; நெருக்கினாலும் கொடாக்கண்டனாக சிறீலங்கா விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டத்தை இந்தியா புரிந்துகொள்ளாமல் இல்லை. இருந்தும் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில்; ஆழமாக வேரூன்றியிருக்கும் தமிழின விரோதமும்,  இனவாத போக்கும், அதேபார்வையினூடாக விவேகமற்ற முறையில்  இம்முறையும் ஈழத் தமிழர்களின் பிரச்சனையை பகடைக்காயாக மட்டுமே பயன்படுத்துமாயின் இந்திய ஒன்றியம் தனது பெருங்கடல் பகுதியைச் சீனாவிடம் இழந்துவிடும் நிலைக்குத் தள்ளப்படும். 

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image