Home » MUKAVARI 2022-03-26 18:38:14

MUKAVARI 2022-03-26 18:38:14

Source

--------------------------------------------------------------------------------------              முகுந்தமுரளி   

  இலங்கையில்  இனப்பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களால், எழுச்சியுற்ற விடுதலைப் போராட்டத்தினை பயங்கரவாத முலாம்பூசி ஐ.நாவின் அங்கீகாரத்துடன் அதர்மம் அழித்தொழித்த பொழுது, அங்குள்ள வைத்தியசாலை ஒன்றில் மருந்தாளுனராகப் (Pharmacist)  பணியாற்றிய கமலாம்பிகை கந்தசாமி அம்மா அவர்கள் ஒரு போர்ச்சாட்சியம், இனப்படுகொலையின் கண்கண்ட சாட்சியங்களில் ஒருவர். இத்தகைய வாழும் சாட்சியமான கந்தசாமி அம்மா, ஐக்கிய நாடுகள் சபையால் வருடந்தோறும் அனுசரிக்கப்படும் இனப்பாகுபாடு ஒழிப்பிற்கான சர்வதேச தினம் (The International day of the Elimination of Racial Discrimination) மார்ச்  21 ஆம் திகதி அன்று இம்மண்ணுலகை விட்டுச்சென்றுவிட்டார். இவர் மரணம் இயற்கையானது தான். ஆனால் இவரது இழப்பு மற்றுமொரு சாட்சியத்தின் அழிவாகி நிற்கிறது. 

கடந்த முக்கால் நூற்றாண்டாக இலங்கையில் சிங்கள இனநாயகவாதிகள் சனநாயகப் போர்வை போர்த்தி இலங்கையின் வடகிழக்குப்பகுதிகளைத் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இனத்தை திட்டமிட்டு அழிப்பதற்கு ஒத்து ஊதிக் கொண்டு வேசம் இடுகிறது சர்வதேச சமூகம். திருத்தச் சட்;டங்கள் மூலம் ஐ.நாவின் மனித உரிமைகளைக்கூட மதியாது தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பறித்தெடுத்தது, அடக்குமுறையால்; அழிக்கிறது இனவாத இலங்கை அரசு. இதற்கு மேலும் இவர்களுடன் வாழமுடியாது, தமிழர்கள் தங்கள் பூர்வீக நிலங்களான தாயகபூமியை தமிழீழம் எனப் பெயரிட்டு சுதந்திர தமிழீழம் மட்டுமே தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்பதனை உலகிற்கு சனநாயக வழிமுறைகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக வெளிப்படுத்தினர், சாத்வீகமாகப் போராடிய ஈழத் தமிழ்த் தலைவர்கள். 

அதேகாலகட்டத்தில் நிராயுதபாணிகளாக விளங்கிய தமிழர்களை ஆயுதபாணிகளான அரசபடைகள் மூலமும், ஆயுதம் ஏந்திய சிங்களக்காடையர்களின் மூலமும் கொன்றழித்துக் கொண்டிருந்தது சிங்களப் பேரினவாத அரசு. ஆயுதம் தாங்கி எம்மினத்தை அழித்துவருபவர்களை ஆயுதங்கொண்டு எதிர்கொள்வதன் மூலமே தமிழ் மக்களை காப்பாற்றும் ஒரேவழி எனத் தீர்மானித்தனர் இளைஞர்கள். அகிம்சைக்குப் பெயர் போன சனநாயக இந்தியாவாகிய அயல்நாட்டாலும் (தேவைகருதி),  இராணுவப்பயிற்சியுடன் ஆயுதமும் வழங்கப்பட்டு இந்த இளைஞர்கள் போராட ஊக்குவிக்கப்பட்டார்கள். பின்னர் 87 இல் இதன் அறுவடையாக அரங்கேறியது இலங்கை-இந்திய ஒப்பந்தம். 

அவ்வேளை அமைதிப்படையெனும் பெயரில் தமிழர்கள் தாயகப்பரப்பெங்கும் இந்தியா ஆக்கிரமித்து வைத்திருந்த வேளை. விடுதலைப் புலிப்போராளிகளை அழித்துவிட பெருமுயற்சிகள் எடுத்த காலகட்டம். இந்திய இராணுவம் வீசிய ஆட்லெறித் தாக்குதலில் கொக்குவிலில் மக்களில் ஒருவனாக ஆயுதம் ஏந்திய எவரையும் பிடிக்காதவனாக விளங்கிய ஒரு மாணவனை ஆயதம் ஏந்தத் தூண்டியது. மக்களில் ஒருவனாக இருந்த அந்த இளைஞனின் தந்தையார் கந்தசாமி விதானையார். அந்த இளைஞனின் தாயார் யாழ் போதனா வைத்தியசாலையில் மருந்தாளுனராகப் பணியாற்றிய கமலாம்பிகை அம்மா. இம்மாதம் ஆரம்பநாளில் என்னுடன் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு மார்ச் 30 ஆம் திகதி 2009 இல் வீரமரணம் அடைந்த தன்னுடைய மகன் விக்ரர் (வெற்றியழகன்) நினைவு தினம் வருவதை நினைவூட்டி மறக்காது பத்திரிகையில் எழுதிப் பிரசுரிக்கும் படி வேண்டிய அம்மாவைப் பற்றியே எழுதவேண்டிய கட்டாயத்தை காலம் என்கையில் திணித்துவிட்டது. 

மாவீரச் செல்வத்தைப் பெற்றெடுத்த ஈழத்தாய் இவர், கொட்டும் பனியோ, மழையோ, கொழுத்தும் வெயிலோ தமிழீழத் தேசியச் செயற்பாடுகள் அனைத்திலும் தோளோடு தோள்கொடுத்து புலம்பெயர் தேசத்தில் செய்பட்டவர் எங்கள் அம்மா. இறப்பதற்கு ஒரு முன் ஒரு வார காலமாக கிழக்கில் எல்லேயோரங்களில் இருக்கும் தமிழ் மக்களிற்கு அனுப்புவதற்காக ஆடைகளைத் திரட்டித் தரும்பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார் கந்தசாமி அம்மா. வெள்ளிக்கிழமை என்னைத் தொடர்பு கொண்டு தான்செய்துள்ள ஏற்பாடுகளைச் சொல்லி தன்னையும் வந்து சந்திக்குமாறு வேண்டினார். திங்கள் கிழமை வந்து சந்திக்கிறேன் அம்மா என்றுகூறினேன். ஆனால் அம்மாவைச் சந்திப்பதற்கு அம்மா இவ்வுலகில் இல்லை என்ற செய்தியே என்னை வந்தடைந்தது. 

தாயகத்தில் வாழ்ந்த காலத்திலும் பலஅர்ப்பணிப்புக்கள், இன்னல்கள், இடர்கள், சவால்கள்  கொடூரமான இராணுவ ஒடுக்குமுறைகள் அனைத்திற்கும் முகம் கொடுத்த அன்னை வேராடு பிடுங்கி அந்நியதேசத்தில் வீசப்பட்ட பின்னரும் இறுதி மூச்சு வரைக்கும் தமிழீழம் ஒன்றே தமிழர்களைப் பாதுகாக்கும் ஒரே வழி என்பதனை உறுதியாக நம்பியவர். புலம் பெயர் தேசத்தில் ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கை நிச்சயமாக தமிழர்களுக்கு விடிவைப் பெற்றுத் தரும் என்று உறுதியாக நம்பிச் செயற்பட்டவர்.  13.3.2022 ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான பொது வாக்கெடுப்பின் (Yes to Referendum) எனும் நூல்வெளியீட்டு நிகழ்வில் பங்குபற்றிவிட்டு மறுநாள் என்னிடம் தொடர்புகொண்டு இந்நிகழ்வுபற்றியும், அந்நூலை நாம் எல்லோருமாக மக்களிடம் சென்றடைய பணிபுரியவேண்டும் எனத் தன் உள்ளக் கிடக்கையை எடுத்தியம்பினார். 

 அம்மா கனடாவில்தான்  எனக்கு அறிமுகமானார். எல்லாத் தேசிய நிகழ்வுகளிலும் கனிவான விசாரணையோடும், மெலிதான புன்னகையுடனும் கண்ட அம்மா என்றுமே சோர்வடையாத ஒரு மக்கள் போராளி. 2020 இல் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கான நீதிதேடிய நெடுநடைப்பயணத்தில் நடந்தவர்களுக்கு உற்சாகமூட்டிய வண்ணம் பிறம்ரன் முதல் ஒட்டாவா வரை பயணித்த அம்மாவை வியப்புடன் பார்த்தேன். அவர் வயதை ஒத்தவர்கள் மத்தியில் அவர் ஒரு முன்னோடி என்றால் மிகையாகாது. 

2021 இல் நடைபெற்ற இரண்டு நீதிக்கான நடைபயணங்களிலும் அம்மாவின் பங்களிப்பும் உற்சாகமூட்டலும் பாதம் பதித்தது. தானாகவே நிதிதிரட்டி   இந்நிகழ்வுகளுக்கு ஆதரவு அளித்தமை, தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு தேசப்பற்றாளர்களை இந்நிகழ்வுகளுக்கு அழைப்பதும் என்று இவரது அளப் பெரும்பணிகளைச் சொல்ல ஒரு பக்கம் போதாது. வலிந்துகாணமலாக்கப்பட்டடோருக்கான    சர்வதேச தினத்தன்று ஈழமுரசால் வெளியிடப்பட்ட விசேட பதிப்பில் 200மேற்பட்ட பிரதிகளைத் தன்னுடன் எடுத்துச் சென்று பிற இனத்தவர்களுக்கு அதுபற்றி விளக்கமும் கொடுத்து விநியோகம் செய்தவர் எங்கள் அம்மா. சரளமாக ஆங்கிலத்தில் பேசி விளங்கப்படுத்தும் வல்லமை கொண்ட அம்மாவின் சாட்சியம் மிகவும் வலுவானது. கனடாவிற்கு வருகை தந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் அம்மாவைச் சந்தித்து பேசியமை நினைவில் நிழலாடுகிறது. 

தாயகத்தில் அல்லலுறும் உறவுகளுக்கு தள்ளாத இந்த வயதினிலும் தளராத உறுதியோடு உதவிகள் பல செய்து வந்த அம்மா கடந்த மாதம் இரட்டைக்குடியுரிமை எடுக்கப்போவது தொடர்பாக என்னுடன் கலந்தாலோசித்தார். இறப்பேன் எனும் எண்ணமே இறுதிவரைக்கும் அவரிடம் தோன்றவேயில்லை. ஆனால் இறப்பதற்கு முன் செய்துவிடவேண்டும் என பலபணிகளைத் திட்டமிட்டுச் செயலாக்க முனைந்த வண்ணமே இருந்தார். இலங்கை போவதற்கும் தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தார். 

அதேவேளை புலம்பெயர்தேசத்திலும் தமிழீழத் தேசியப் போராட்டத்திற்கு வலுவூட்ட எம்மை வரலாற்றைக் காவிச்செல்ல இளைஞர்கள் தேவை என அவர்களை அடையாளம் கண்டு ஒருங்கிணைப்பதையும் அம்மா தன் தலையாய கடமையாகக் கருதினார். தாயகத்தில் கணவனை இழந்து, போர்க்களத்தில் பெற்ற மகனை இழந்து, மகளும் கடல் கடந்து செல்ல தனிமையானார். அந்த தனிமையால் உண்டாக்கப்பட்ட துணிச்சலே அம்மாவிற்கு ஆன்மபலத்தையும், போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தன்னால் முடிந்தளவு உபகாரங்களையும் செய்கின்ற அளவுக்கு உறுதியையும் வழங்கியது. 

சாதாரணமான மனிதர்களே மரணிக்கின்றார்கள். வாழ்வாங்கு வாழ்பவர் முன் மரணம் மரணிக்கும். அம்மாவின் தாயகம் நோக்கிய அயராத சேவைகளும், நெஞ்சத்தின் பரிவுடனான மென்மையின் வெளிப்பாடான கனிவும் அவரது நற்குணமாக, நற்பண்பாக மிளிர்கையில் அவருக்கு முன் மரணம் கூட மண்டியிட்டே அரவணைத்தது. திருமணவீடு ஒன்றிற்கு சென்றுவிட்டு வந்தமர்ந்த அம்மாவை எதுவித சிரமும் கொடுக்காமல் இயற்கை அணைத்துக் கொண்டது. வெறும் சடமான உடலை அடைவது இறப்பு எனப்படலாம். ஆனால் அம்மா இறை சித்தத்தினால் கொண்ட அர்த்தமிகு அர்ப்பணிப்புடனான சேவைகள் முன் - இறப்பின் பின்னரும், ஆன்மா வாழும் உரிமையை, உண்மையை உணர்த்திய வண்ணமேயிருக்கும்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image