Home » MUKAVARI 2022-05-20 04:32:18

MUKAVARI 2022-05-20 04:32:18

Source

  ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- முகுந்தமுரளி 

மே 18ஆம் திகதியை தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் நாளாக கடைப்பிடிக்கவேண்டும் என்று கூறும்  தீர்மான நகர்வை கனேடிய நாடாளுமன்றம் இன்று ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. மிகவும் முக்கியமான இந்நாளில் (மே 18), ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் தேதியை தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் நாளாக அங்கீகரிக்கும் உலகின் முதல் தேசிய பாராளுமன்றம் கனடாவாகும். 

Gary Anandasangaree on Twitter: "Today, the Canadian parliament unanimously passed a motion to recognize May 18th as Tamil Genocide Remembrance Day. On this very important day, Canada becomes the first national parliament in the world to recognize May 18th of each year as Tamil Genocide Remembrance Day. https://t.co/tfkwD2eAZl" / Twitter

இன்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்ட இந்தத் தீர்மானமானது தமிழ் சமூகத்தினது பல உறுப்பினர்களின்  நீண்டகால கடின உழைப்பு மற்றும் பரப்புரையின் உச்சகட்டமாகும். இலங்கைத் தீவின் அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பானது  பல மனித உரிமை மீறல்களையும், நீதியை வேண்டி நிற்கும்; சர்வதேச சமூகத்தையும் எதிர்கொள்கிறது. இவ்வாறாக கனடியப் பாரளுமன்ற உறுப்பினர் கரி. ஆனந்த சங்கரி அவர்கள் தனது கீச்சகத்தில் தெரிவத்திருக்கின்றார். 


முதற்கண் கரி. ஆனந்த சங்கரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.  நிச்சயமாக மிக முக்கியமான நாளில் கரி. ஆனந்த சங்கரி அவர்கள் சரியான முறையில் முயற்சியெடுத்து தனிநபர் முன்னெடுப்பாக இந்த நகர்வை கனடியப்பாரளுமன்றில் முன்மொழிந்து எதிர்ப்புக்கள் ஏதும் எழாத சூழ்நிலையில் மே 18 ஆம் திகதியை தமிழ் இன அழிப்பு நினைவேந்தல் தினமாக அங்கீகரிக்ககோரும் நகர்வை கனேடிய பாராளுமன்றம் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. ஆனால் இந்நகர்வு என்பது உறுதியற்றது. ஏனெனில் இது முழுமை பெறுவதற்கு கனடா பாராளுமன்ற சட்டதிட்டத்தின்படி மேலும் ஒரு சிலபடிமுறைகள் ஊடாக நகர்த்தப்பட்டு அவற்றிலும் ஏகமனதான ஒப்புதல் பெறப்பட்டு செனற்சபையாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிற்பாடு  இறுதிப்படியாக முடிக்குரிய அங்கீககாரம் என்று சொல்லப்படுகின்ற ஆளுநரின் அங்கீகாரமும் பெறப்பட்ட பின்னரே  சட்டமாக முழுமைபெறும். அதுவே உறுதியானதாகும். விளக்கமாகச் சொல்லப்போனால் தற்சமயம் நடைபெற்றிருப்பது நிச்சயதார்த்தம் என்று எடுத்துக்கொண்டால், ஆளுநரின் அங்கீகாரத்தோடு சட்டமாக்கப்படுவது சட்டபூர்வ திருமணத்திற்கு ஒப்பாகும். 

உண்மையில் கரி. ஆனந்தசங்கரி அவர்களின் இந்த முன்னெடுப்பானது உலகின் இதரநாடுகளுடைய பாராளுமன்றங்கள் குறைந்தபட்சமாக இதேபோன்ற நகர்வுகளை மேற்கொள்வதற்கான உந்துதலாக அமைகிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதேவேளை ஒன்ராரியோ மாகணத்தில் பில் 104 என்ற பெயரில் சட்டமாக்கப்பட்ட தமிழின அழிப்பு கல்விவாரச் சட்டத்திற்கு  இந்நகர்வானது மேலும் வலுவூட்டுகிறது. 

கத்தியில் நடப்பதுபோன்ற ஒரு களச்சூழ்நிலையில் கனகச்சிதமாக இந்நகர்வைக் கையாண்ட கனடா பாரளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி அவர்கள் பாராட்டுக்குரியவரே. உண்மையில் இந்த நகர்வானது முன்மொழியப்படும் பொழுது யாராவது ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது மறுதலித்திருந்தால் தமிழினம் மீண்டும் ஆழத்துயரத்தில் வீழ்ந்திருக்கும். அவ்வாறு இல்லாது இந்த முன்மொழிவானது பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு பூரண ஆதரவு வழங்கிய கன்சர்வேடிவ் கட்சி, பிளாக் கியூபெகுவாஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ள கரி ஆனந்தசங்கரி மேலும் குறிப்பிடுகையில் இந்த நகர்வின் வெற்றியை உறுதி செய்வதற்காக புதிய ஜனநாயகக் கட்சி(NDP), மற்றும் பசுமைக் கட்சி (Green Party)மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக உழைத்தவர்கள் எனக் தனது நன்றியறிதலில் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறு இந்நகர்வு பற்றிய செய்தியினால்  அக்களிப்பு அடைந்து கரி. ஆனந்தசங்கரி அவர்களைப் பாராட்டுவதோடு நின்றுவிடாமல் இந்நகர்வானது சட்டமாக்கப்படுவதற்கான ஒத்துழைப்பை இதனுடைய அடுத்தடுத்த படிமுறைகளில் வழங்க வேண்டுமென்று தத்தமது தொகுதிப்பாராளுமன்ற உறுப்பினர்களை அணுகி அதற்கான அழுத்தங்களைக் கொடுக்கவேண்டியது கனடாத் தமிழர்கள் அனைவரினதும் தலையாய கடமையாகும். 

அதேவேளை மே 18 கனடா பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அவர்கள் வெளியிட்ட அறிக்கை நாம் நினைப்பதுபோல் தமிழின அழிப்பை நினைவேந்தும் நாளுக்குரிய அறிக்கையாக வெளிவரவில்லை. மாறாக இலங்கையில் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பிரதமர் ஜஸ்ரின் ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கை எனவே தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. 

Statement by the Prime Minister on the 13th anniversary of the end of the armed conflict in Sri Lanka | Prime Minister of Canada (pm.gc.ca)


அந்த அறிக்கையில் “இலங்கையில் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடையும் இவ்வேளையில், முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட இந்த 26 வருடகால ஆயுதப் போரின் போது உயிரிழந்த உயிர்களையும், உயிர்நீத்தவர்களையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறோம். காணமல் போனவர்கள்,  காயமடைந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்கள் அவர்களின் இந்த சோகத்தின் வலி, அதிர்ச்சி மற்றும் இழப்புடன் தொடர்ந்து வாழும் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன.” எனக் குறிப்பிடுகிறார் கனடாப் பிரதமர்.

இந்த முதலாவது பந்தியிலேயே கவனிக்க வேண்டியது இது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளாக  தமிழர்களின்  இழப்பின் வலிகளை பெரும் கொடிய துயரைத்தை தமிழருக்கு நேர்ந்த பேரவலத்தை நினைவேந்தலாக  கடைப்பிடிக்கும் இந்த நாளில் ஜஸ்ரின் ரூடோவின் இந்த அறிக்கை “ஆயத மோதல்” நிறைவுக்கு வந்ததை நினைவுகூரும் தினமாக வெளியிட்ட அறிக்கை,  வெறுமனே படுகொலைகள் (Massacre ) என்ற சொற்பதத்தின் மூலமே முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்ட, தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்பைப் பூசி மெழுகி குறிப்பிடுகிறது. ஆயுதப்போரில் உயிர்நீத்த அனைவருக்கும் என பொதுக்கண்ணீர் வடிக்கிறது. இதனை ராஜதந்திரம் என அரசியல் வட்டாரத்தில் சொல்லலாம். ஆனால்  இது தமிழ் மக்களின் மீதான இனவழிப்பை கருத்தில் எடுக்காது கடந்து செல்லும் அவரது போக்கு, அறிக்கையில் தென்படுகின்றது. 

உக்ரைனில் இனவழிப்பை ரஷ்யா செய்கிறது எனத் தீர்மானம் நிறைவேற்றிய கனடாப் பிரதமர் எங்கள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட, உக்ரைனைவிட மோசமான அளவில் எம்மக்கள் மீது நடந்தேறிய பாரிய இனப்படுகொலையை அறிந்திருந்தும் அறியாததுபோல் விடும் அறிக்கை பூகோள அரசியல் நிலைப்பாட்டை சிந்திக்கத் தூண்டுகிறது. 

தொடர்ந்து அந்த அறிக்கை கூறுவதாவது, “இந்த ஆண்டு, தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் போது இலங்கையில் மக்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது குறித்தும் எங்களது கவலையை வெளிப்படுத்துகிறோம். ஆர்ப்பாட்டம் செய்வதற்கான மக்களின் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம், மேலும் வன்முறையில் இருந்து விலகியிருக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்.

“தமிழ் மக்கள் உட்பட இலங்கையர்கள் அனைவரும் ஒரு பாதுகாப்பானதும், அமைதியானதும் மற்றும் உறுதியான நாட்டிற்கு பாத்திரமானவர்கள். பல ஆண்டுகளாக, நான் தமிழ் சமூகத்தையும், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஏனைய சமூகத்தினரையும் கடந்தகாலங்களில்  சந்தித்துள்ளேன் மற்றும் அவர்களின் அனுபவங்கள் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கான தொடர்ச்சியான தேவையை நமக்கு நினைவூட்டுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்குமான நீதி வழங்கும் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையை ஸ்தாபிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு கனடா தொடர்ந்து அழைப்பு விடுக்கிறது, மேலும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழுவின் உறுப்பினராக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். மற்றும் நல்லிணக்கம். கனடா தனது மனித உரிமைக் கடமைகளை நிலைநிறுத்த உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கும், மற்றும் நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிச் செயல்படும் அனைவருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தனது ஆதரவைத் தொடர்ந்து வழங்குகிறது.

“இன்று, கனேடியர்கள் தங்கள் தமிழ் அயலவர்களையும் நாடி , இலங்கையில் ஆயுத மோதலால் பாதிக்கப்பட்ட மற்றவர்களையும் அணுகி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த நான் ஊக்குவிக்கிறேன். கடந்த கால அவலங்களைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலமும், அவற்றைப் பற்றி சிந்திப்பதன் மூலமும், அவை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்யவும், அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முடியும்.”  என அவரது நோக்கத்தை தெளிவுபடுத்தி நிற்கிறது. இதனால் தெளிவுபடுவதானது, ரணில் பிரதமரானதும் வாழ்த்து அனுப்பிய ரூடோ அவர்கள் அடுத்து பொருளதார ரீதியாக உதவ பணங்கூட அனுப்பலாம். 

இது ஒரு புறம் எனில் மறுபுறம் இலங்கையில் நடைபெறும் ஆர்பாட்டங்கள் அதன் சூழ்நிலைகள் மூலம் தமிழ் மக்களின் பிரச்னைகளை சிங்கள மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று உலகமே எண்ணும் இந்நநாட்களிலேயே,  உலகத்தின் கண்கள் முன்னாலேயே அந்த நம்பிக்கையை தகர்த்தெறியும் வகையில் ஒரு சம்பவம் அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் நடைபெற்றுள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிங்கள மக்கள் மத்தியில் எமக்கு நடந்த இன அழிப்பை நினைவேந்தி தமிழ் மக்கள் வழங்கிய துண்டுப் பிரசுரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிங்களவர் ஒருவரால் கிழித்தெறியப்பட்டு அவ்வாறு இலங்கையில் நடைபெறவில்லை என்று மறுதலித்த சம்பவமும் நடைபெற்றுள்ளது. அரசாங்கத்தை துரத்த  மூவினமக்களுக்கும் அழைப்புவிடுக்கும் சிங்களவர்கள் தமிழினத்திற்கு 74 வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் அநியாயத்தையும், அதிலும் உச்சக்கட்ட இனப்படுகொலை நடந்த முள்ளிவாய்க்கால் நியாயங்களை தமிழர்களின் பிரச்சனைகளைச் செவிமடுக்க பெரும்பான்மையான சிங்களவர்கள் தயாரில்லை என்பதையே காட்டுகின்றது.  அNது இடத்திலேயே இன்னொரு சிங்களக்குடிமகன் விராஜ் திசநாயக்க தமிழ் மக்களிற்கு ஆதரவாகப் பேசி தமிழ் மக்களின் பிரச்சனைகளை செவிசாய்க்க வேண்டிய நேரம் என்பதனைiயும் எடுத்துரைத்தமையும் காட்சியானது.

சந்திரிகா அம்மையாரின் கீச்சகத்தில் இனவழிப்பை நினைவு கூர்ந்தார் எனும் போலிச் செய்திக்கும் குறைவில்லாத அதே நேரத்தில் காலிமுகத்திடலில் முதன்முறையாக முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவேந்தலானது முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலுடன் நடைபெற்றுள்ளது.  யாவும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும்,  உண்மையில் உள்நாட்டில் இன அழிப்பு பரிமாணத்திற் கொடுமைகளை இழைத்துவரும் அடக்குமுறை ஆட்சியாளர்களின் அரச பயங்கரவாதத்தையோ, பெரும்பான்மையான சிங்களவர்களின் இனத்துவேச வெறியினையோ நீண்டகாலம் சர்வதேச சமூகம் அலட்சியம் செய்ய முடியாது. அதேநேரம் நிறுவனமயப்படுத்தப்பட்ட  பேரினவாத சிங்கள மக்களையும், அரச பயங்கரவாத அடக்குமுறை அரசுகளையும் உலகம் தண்டிக்க முன்வருகின்றதோ இல்லையோ தர்மத்தின்; படி அவர்கள் தங்கள் கர்மாவினையின் பயனை அனுபவித்தே தீர்வார்கள் என்பதே தற்போதைய இலங்கையின் கையறு நிலையாகும். 

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image