– இலங்கையின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் அதனை அண்மித்த தென்மேற்கு கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சூறாவளியாக வலுப்பெற்றுள்ளதுடன், அதற்கு ‘அக்வான்’ (Akvan) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
2026 நவம்பர் 16ஆம் திகதி இரவு 11.30 மணியளவில், திருகோணமலையிலிருந்து சுமார் 640 கிலோமீற்றர் தொலைவில், வட அகலாங்கு 12.2° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.7° பகுதியில் இந்தச் சூறாவளி மையம் கொண்டிருந்தது.
இந்தத் தொகுதி தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதுடன், இன்று (நவம்பர் 17) மாலை 5.30 மணியளவில் மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் தீவிர சூறாவளியாக (Severe Cyclonic Storm) வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நவம்பர் 19ஆம் திகதி காலை 5.30 மணியளவில் மிகவும் தீவிரமான சூறாவளியாக (Very Severe Cyclonic Storm) வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20ஆம் திகதி காலை 11.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடற்கரையில் நெல்லூர் மற்றும் டூனி ஆகிய பகுதிகளுக்கு இடையில் மிகவும் தீவிரமான சூறாவளியாகக் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
இன்று (நவம்பர் 17) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
The post ‘அக்வான்’ சூறாவளியாக வலுப்பெற்றது appeared first on LNW Tamil.