– செப்டம்பர் 12 முக்கிய நாள்
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வரும் GSP+ வரிச் சலுகை 2026 செப்டம்பர் 12ஆம் திகதியளவில் இழக்கப்படும் கடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வரிச் சலுகையை தொடர்ந்து பெறுவதற்குத் தேவையான விண்ணப்பங்களை இலங்கையின் சம்பந்தப்பட்ட தரப்புகள் இதுவரை முழுமையாக சமர்ப்பிக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டாலும், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள சில நிலைமைகள், GSP+ சலுகையை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் கருத்தில் கொள்ளும் நிபந்தனைகளுடன் ஒத்துப்போகாததால், இந்த விடயத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, இலங்கையின் நீதித்துறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிர கவனத்திற்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை திடீரென அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பாக கேள்விகள் எழக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூஜித் – ஹேமசிறி வழக்கு தீர்ப்பு
மேலும், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது, ஐரோப்பிய ஒன்றியம் GSP+ சலுகையை வழங்கும்போது கருத்தில் கொள்ளும் “நியாயமான விசாரணைக்கான வாய்ப்பு” என்ற காரணியுடன் முரண்படக்கூடியதாகக் கருதப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 75 மில்லியன் ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவிடப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் சாட்சியம் மாத்திரம் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக ஆராயக்கூடும் எனவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
The post GSP+ வரிச் சலுகை இழக்கும் அபாயத்தில் இலங்கைக்கு! appeared first on LNW Tamil.