கொழும்பு: அதிகரித்த பணிச்சுமை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி, தன்னால் பணியாற்ற முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் பதிவேட்டில் குறிப்பொன்றை பதிவு செய்துவிட்டு தற்காலிகமாகபணியிடத்தை விட்டு வெளியேறிய தெஹிவளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பரிசோதகர் பிரணீத் உதயங்க என்பவரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
கடந்த 02ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு வந்து கடமையில் ஈடுபட்டிருந்த அவர், தமக்கு ஏற்பட்டுள்ள கடுமையான மன அழுத்தம் தொடர்பில் பொலிஸ் பதிவேட்டில் குறிப்பொன்றை பதிவு செய்த பின்னர்தற்காலிகமாக பொலிஸ் நிலையத்திலிருந்துவெளியேறியுள்ளார்.
மறுநாள், 03ஆம் திகதி மீண்டும் பணிக்கு சமூகமளிக்கஅவர் முயன்ற போதிலும், அவருக்கு பணிக்கு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தெஹிவளை பகுதி கொழும்பு மாநகர எல்லையைஅண்மித்த அதிக மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதியாகும். அங்கு போக்குவரத்து பிரிவின் பணிகள் மிகவும் சிக்கலானவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தெஹிவளை பொலிஸ் பிரிவில் போக்குவரத்து கடமைகளுக்காக சுமார் 20 இடங்களில் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டியுள்ளநிலையில், குறைந்தபட்சம் 40 அதிகாரிகள் தேவைப்படுவதாகவும், தற்போது சுமார் 13 அதிகாரிகள் மட்டுமே இருப்பதாகவும் பொலிஸ் வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
அத்துடன், அந்த 13 அதிகாரிகளில் சிலர் பொலிஸாரின் ஏனைய கடமைகளுக்கும் பயன்படுத்தப்படுவதாகவும்கூறப்படுகிறது.
இதனால் தேவையான அதிகாரிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியினருடன் மாத்திரம் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரிக்கு கடுமையான பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், போக்குவரத்து பிரிவின் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகளையும் பொறுப்பதிகாரியே மேற்கொள்ளவேண்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் பொலிஸ் பிரிவிற்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டசந்தர்ப்பங்களில், பொலிஸ் நிலையபொறுப்பதிகாரியிடமிருந்து கடுமையான கண்டனங்களையும் அவர் எதிர்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குறித்த அதிகாரி பொலிஸ் பதிவேட்டில் குறிப்பொன்றை பதிவு செய்துவிட்டு தற்காலிகமாகபணியிலிருந்து விலகிய சம்பவம் தொடர்பில், பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் கல்கிசை பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த அதிகாரியின் நடவடிக்கை ஏனைய பொலிஸ் அதிகாரிகளுக்கு தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும் எனத் தெரிவித்து, ‘பி’ அறிக்கை மூலம்கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவருக்கு வெளிநாடு செல்வதற்கான தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த கோரிக்கையை கல்கிசை நீதவான் நீதிமன்றம் நிராகரித்ததுடன், விசாரணை அதிகாரிகளையும்நீதவான் கடுமையாகக் கண்டித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டு முன்வைப்பதற்கான ஆதாரங்கள் வெளிப்பட்டால் மாத்திரம் எதிர்வரும் 24ஆம் திகதிநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான்உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தினால் குறித்த அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஒழுக்க விதிமுறைகளை மீறியதாகக் கூறி, செப்டம்பர் 03ஆம் திகதி முதல் பணி இடைநீக்கம்செய்யப்படுவதாக அவருக்கு எழுத்து மூலம்அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தம்காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், குறித்த அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸில் தற்போது சுமார் 40,000 அதிகாரிகளுக்கான பற்றாக்குறை காணப்படுவதாகவும், நாடு முழுவதும் போக்குவரத்துப் பிரிவில் சுமார் 7,000 பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே பணியாற்றுவதாகவும்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாட்டில் சுமார் 14 இலட்சம் கார்கள் உட்பட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 110 இலட்சம்எனக் கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்துப் பிரிவில்பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள், குறிப்பாக பிரிவு பொறுப்பதிகாரிகள், கடுமையான பணிச்சுமையை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் பிரணீத் உதயங்க மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது இளைய குழந்தைக்கு தற்போது ஒரு மாதமே வயதாகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவரது குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரம் அவரது பொலிஸ் பணியே எனவும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் பொலிஸ் அதிகாரிகளின்நிலைமையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டியதன் அவசியம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
கடுமையான பணிச்சுமையால் அதிகாரி மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தால், அவருக்கு தற்காலிகமாக வேறுபொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் வழங்குவது அல்லது தேவையான உளவியல் மற்றும் மருத்துவ ஆதரவை வழங்குவது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் எனவும் கருத்துகள்முன்வைக்கப்படுகின்றன.
“தமது சொந்த அதிகாரிகளின் பணிச்சுமை மற்றும் மனநிலையைக் கூட பொலிஸ் திணைக்களம் இவ்வாறு கையாளுமானால், சாதாரண பொதுமக்களின் நிலை என்ன?” என்ற கேள்வியும் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சமூகத்தில் எழுந்துள்ளது.
The post பணிச்சுமையால் மன உளைச்சலுக்கு ஆளான பொலிஸ் அதிகாரி தொடர்பான பின்னணி இதோ appeared first on LNW Tamil.