அத்தியாவசியப் பொருட்களுக்கு புதிய வரிகள் விதிக்கப்படவில்லை.
அரசாங்கம் ஐந்து பொருட்களுக்கான புதிய விசேட வர்த்தக வரியை விதித்துள்ளதாக வெளியாகும் போலிச் செய்தி பற்றி நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சு விளக்கமளித்துள்ளது.
இந்த விசேட வரி 2023ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய அமுல்படுத்தப்பட்டதோடு, இது கடந்த 13ம் திகதி முடிவுக்கு வந்தது.
இதனை மீண்டும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலே தற்சமயம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இது எந்தவிதத்திலும் புதிய வரி விதிப்பாக கருதப்பட மாட்டாது. இறக்குமதி செய்யப்படும் பருப்பிற்கான 25 சதம் பெறுமதியான வரி தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
உள்நாட்டு மீனவர்கள் – தேசிய பழ உற்பத்தியாளர்கள் ஆகியோரைப் பாதுகாக்கும் நோக்குடனும் அந்நியச் செலாவணியைக் கருத்திற்கொண்டும் ஏனைய நான்கு பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள வரியை தொடர்ந்தும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கமைய உரிய வர்த்தமானி அறிவித்தல் ஒரு வருடம் வரை நீடிக்கப்பட்டாலும் இதனை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை மாத்திரம் நடைமுறைப்படுத்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.