அரசாங்கத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்திய சிறீதரன்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரைய மீது நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமையும் இன்று வெள்ளிக்கிழமையும் விவாதம் இடம்பெற்றது.
விவாதத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் உரையாற்றிய சிவஞானம் சிறீதரன்,
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை முன்மொழியவில்லை.
இலங்கைத் தீவில் கடந்த எட்டு தசாப்தங்களாக இனப்பிரச்சினை நிலவி வருகிறது. ஆனால், ஜனாதிபதி அதை பற்றி பேசாது நாட்டில் வெறும் பொருளாதார பிரச்சினை மாத்திரமே இருப்பது போன்று பேசியுள்ளமை தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
சமாதானத்தின் கதவுகள் மூடப்பட்டுள்ளன. இலங்கையின் தலைவர்கள் பலமுறை உலகத்தை ஏமாற்றியுள்ளனர். தமிழர்களுடன் கைச்சாத்திட்ட எந்தவொரு ஒப்பந்தத்தையும் நடைமுறைப்படுத்தாமையே நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதை நாட்டின் தலைவர்கள் உணரவில்லை.
நாட்டில் சமாதானம் பிறக்காது, இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை கட்டியெழுப்பப்படாது பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.
சிறிமாவின் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களால் நாட்டில் உற்பத்தியில் தன்னிறைவு ஏற்பட்டது. 1977களின் பின்னர் ஐ.தே.கவின் அரசாங்கம் வந்தப்பின்னர் நாடு கடுமையான கடனில் முழ்கியது. அதன் பின்னர் கடனை எவ்வாறு வாங்குவது என்றே சிந்தித்தனர்.
சிறிமாவின் காலத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு என அனைத்துப் பகுதிகளில் இருந்து உற்பத்திகள் அதிகரித்தன.
ஆகவே, சிங்களத் தலைவர்கள் இதய சுத்தியுடன் செயல்பாடமையே பிரச்சினைகளுக்கு காரணம் என்பதை அவர்கள் உணரவில்லை.
யுத்த வெற்றியை மாறி மாறி வந்த அரசாங்கங்கள் கொண்டாடின. இராணுவத் தளபதிகளுக்கு விருதுகளை வழங்கி மக்களை ஒரு போரியல் மாயைக்குள் மடக்கி வைத்திருந்தீர்கள்.
அரகலய போராட்டம் வெடித்தப் பின்னர்தான் நாட்டு மக்கள் ஆட்சியாளர்களையும் நாட்டின் பொருளாதாரம் ஊசல் ஆடுவதையும் உணர்ந்துக்கொண்டனர்.‘‘ என்றார்.