அரசியல் கட்சி உறுப்பினர்களை ஓரணியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்படும்.
இந்த நாட்டில் இரண்டு தரப்புக்கும் இடையில் பரிமாறப்பட்ட அரசியல் அதிகாரம் எதிர்வரும் 21ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்படுவது உறுதி என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியல் மேடைகளில் பொய்ப் பிரசாரங்களை வெளியிடுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் இனவாதத்தை விதைத்து ஒருவரையொருவர் அந்நியப்படுத்தும் முயற்சிகள் இல்லாதொழிக்கப்படவேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
முன்னைய அரசாங்கத்தில் மோசடியாளர்கள் மற்றும் ஊழல்வாதிகள் பாதுகாக்கப்பட்ட விதம் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்படும்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் எதிர்வரும் 22ஆம் திகதி நாடு முழுவதும் பாரிய கலவரம் வெடிக்கும் என பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
மாளிகாவத்தை பீ.டி. மைதானத்தில் நடைபெற்ற நிறுவனங்களுக்கு இடையிலான நிறுவன ஊழியர் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தனது வெற்றியின் பின்னர் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களையும் சந்தித்து, ஓரணியில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து பிரஜைகளையும் ஒன்றிணைத்து நாடு கட்டியெழுப்பப்படும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.