புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் ஊடாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை அழைத்து வர முடியுமா என்று கேள்வி எழுப்பிய ஜே .வி.பி.தலைவரும் எம்.பி.யுமான அனுர குமார திஸாநாயக்க, முடியாது என்று தெரிவித்ததுடன் ஏனைய நாடுகளில் அவ்வாறு இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
பிணைமுறி மோசடியாளர் என்று குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க இப்போது ஜனாதிபதியாக இருக்கின்றார். அவரை மோசடியாளர் என்று குறிப்பிட்டவர்கள் தற்போது அமைச்சர்களாக இருக்கின்றனர் என்றும் கூறினார்.
பாகிஸ்தான், பங்களாதேஷ் , இந்தியா போன்ற நாடுகளில் பிரதமர் மற்றும் அரசியல்வாதிகள் ஊழல் மோசடி குற்றத்தால் சிறை சென்றுள்ளார்கள், செல்கிறார்கள். ஆனால் இலங்கையில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கூட சிறை செல்வதும் இல்லை, தண்டனை அனுபவிப்பதும் இல்லை.
இயற்றப்பட்ட சட்டத்தில் எந்த குறைப்பாடுகளும், பலவீனமும் இல்லை. அரசியல் காரணிகளுக்காகவே சட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்றார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், தொடர்ந்து பேசுகையில்,பொருளாதார படுகொலையாளிகள் சுதந்திரமாக இருக்கும் நிலையில் அப்பாவி மக்கள் பொருளாதார பாதிப்புக்கு நஷ்டஈடு செலுத்துகிறார்கள்.
அத்தியாவசிய பொருள் விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் பொருளாதார குற்றவாளிகள் சுகபோகமாக வாழ்கிறார்கள். பொருளாதார படுகொலையாளர்களினால் நாடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
ஊழல் ஒழிப்புக்கு புதிய சட்டத்தை இயற்ற அவதானம் செலுத்தப்படுகின்ற நிலையில் நடைமுறையில் உள்ள சட்டம் ஏன் பலவீனமடைந்தது என்பது குறித்து ஆராய வேண்டும். நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு சிறுமீன்களான அடிமட்டத்தவர்களே அகப்படுகிறார்கள். பெரிய மீன்களான அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் ஆதரவு உள்ளவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.
ஆகவே நடைமுறையில் உள்ள சட்டம் பலவீனமானது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 600 மில்லியன் சொத்து சேர்ப்பு விவகாரத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினரை ஆணைக்குழுவுக்கு முன்னிலையாகுமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்த போது அரசியல் வரப்பிரசாதங்களை கொண்டு அவர் தப்பித்து விட்டார் என அநுரகுமார தெரிவித்தார்.