Home » இந்தியா அழுத்தம் கொடுத்தால் அமைச்சுப் பதவியை விட்டு விலகுவேன் : டக்ளஸ் பகிரங்கம்

இந்தியா அழுத்தம் கொடுத்தால் அமைச்சுப் பதவியை விட்டு விலகுவேன் : டக்ளஸ் பகிரங்கம்

Source
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் அழுத்தங்கள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகி எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து நியாயமான தீர்வுக்காக போராடுவேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் (27) யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் இந்திய தூதருடனான சந்திப்பின் போது கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய தூதுவருடனான சந்திப்பின்போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் அல்லது அதிகாரப் பகிர்வு தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். குறிப்பாக நான் நீண்டகாலமாக எதை கூறி வந்தேனோ அதுதான் இன்று ஜதார்த்தமாகவுள்ளது என்றும் அதையே இன்று ஏனைய தரப்பினர் ஏற்றுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியிருந்தேன். அதேநேரம் அன்று நான் கூறியதை சக தமிழ் இயக்கங்கள் கட்சிகள் ஏற்றிருந்தால் இன்று இந்த அழிவுகள், இழப்புக்கள், அவல நிலைகள் ஏற்பட்டிருக்காது என்பதையும் எடுத்துக் கூறியிருந்தேன். இதேவேளை நாட்டின் எதிர்கால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தொடர்பாகவும் விரிவாக இந்திய தூதுவருடன் கலந்துரையாடியிருந்தேன். அதைவிட மிகப்பிரதானமானது சமீபத்தில் ஜேவிபியின் தலைவர் இந்தியா சென்று பலதரப்பட்டவர்களுடன் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேச்சுக்களை நடத்தியிருந்தார். ஆனாலும் அவர் இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதுவிதமான கருத்தையும் எடுத்துக் கூறியிருக்கவில்லை. அதேபோன்று சமீபத்தில் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்திய தூதுவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அச்சந்தர்ப்பத்தில் கூட எமது வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் அதே பகுதி தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்று கூறித்திரியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட எதுவும் தெரிவித்திருக்கவில்லை. ஆனால் என்னுடனான சந்திப்பின்போது இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைமீறிய, அத்துமீறிய சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அதனால் எமது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தேன். குறிப்பாக எமது கடல் வளங்கள் சுறண்டப்படுவது தொடர்பிலும் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவது தொடர்பிலும் சுட்டிக்காட்டி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன். ஆனால் அதை தொடர்வதற்கான அழுத்தங்கள் தொடர்ந்தும் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது முன்னெடுக்கப்படுமாக இருந்தால் எனது அமைச்சு பதவியிலிருந்து விலகிவிட்டு எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து போராடுவேன். இதற்கிடையே இலங்கை எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டமை தொடர்பில் தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர் கருத்து கேட்டபோது “போராட்டம் செய்வது அவர்களது உரிமை. அதேநேரம் அவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். ஆனால் சட்டரீதியாக இதைப் பார்க்க வேண்டும். 2018 இல் இது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் ஒரு தடவை எல்லை மீறியிருந்தால் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்படுவர் என்றும் அதற்கு மேல் மீண்டும் எல்லை தாண்டியிருந்தால் சட்டரீதியான தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் எல்லைதாண்டி உள்நுழைந்து வந்தவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டுள்ளனர். இதில் படகு ஓட்டி உரிமையாளர்கள், தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அவர்களுக்கு சுட்டுவிட்டது போலுள்ளது. என்னைப் பொறுத்தளவில் எமது நாடு, எமது கடல், எமது மக்கள் அதற்கே எனது முன்னுரிமை என்பதாகும். அதுவே நியாயம் என்றும் கருதுகின்றேன்” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image