இந்து சமுத்திர பொருளாதாரத்தில் இலங்கையை கட்டமைக்க புதிய திட்டம் – ரணில்
இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு பொருளாதார நாடக இலங்கையை மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இயலும் ஸ்ரீலங்கா தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது, ”ஜனாதிபதி அவர்களே, உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘தேரவாத வர்த்தகப் பொருளாதாரம்’ என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய ஜனாதிபதி, ”கடந்த காலங்களில் இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்டு இந்த வலயத்தில் நமது நாடு வர்த்தக நாடாக இருந்தது.
சீனா உள்ளிட்ட பிராந்தியத்தில் இருந்து பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு பரிமாறப்பட்டது. ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலையை அடிப்படையாக கொண்டு அந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
எங்கள் இந்தக் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்தபோது, அந்த வளர்ச்சி தாய்லாந்தில் ஏற்பட்டது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் அந்த ராஜ்ஜியங்கள் வீழ்ச்சியடைந்தன.
தாய்லாந்து பழைய வழியில் ஏற்றுமதி பொருளாதாரத்தை முன்னெடுத்தாலும் நாம் அந்த முறையை பின்பற்றவில்லை.
மேலும் தாய்லாந்து முறையைப் வியட்நாமும் பின்பற்றியது. தாய்லாந்தும் இலங்கையும் தேரவாத நாடுகளாக முக்கிய வர்த்தகப் பொருளாதாரங்களாக இருந்தன.
1990 இல் இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தி 08 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. வியட்நாமில் மொத்தத் தேசிய உற்பத்தி 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
நம் நாட்டில் கடந்த காலத்தில் தேரவாத பொருளாதாரம் இருந்தது. அந்தத் தேரவாதப் பொருளாதாரத்திற்குத் திரும்பிச் செல்லுமாறு நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்” என்றார்.