வேம்பார் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் மதிப்புள்ள கடத்தல் பொருட்களை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேம்பார் அருகே உள்ள சூரங்குடியில் சினிமா காட்சியை போல 40 கிலோ மீட்டர் தூரம் கடத்தல் வாகனத்தை பின் தொடர்ந்த கியூ பிரிவு போலீசார் மடக்கிப்பிடித்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் இறக்கைகள் மற்றும் திருக்கை மீன் பூ மூட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வாகனத்தை ஓட்டி வந்த இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது(34) என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்அருகே உள்ள வேம்பாரில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக சுறா மீன் இறக்கைகள் மற்றும் திருக்கை மீன் பூ கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப்புலனாய்வு துறை காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், உதவி ஆய்வாளர் வேல்ராஜ், தலைமை காவலர்கள் ராமர், இருதயராஜ் குமார், இசக்கிமுத்து, கோவிந்தராஜ் மற்றும் இரண்டாம் நிலை காவலர் பழனி பாலமுருகன் மற்றும் போலீசார் வேம்பார் அக்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த பொலிரோ பிக் அப் வாகனத்தில் அதிக அளவில் சாக்கு முட்டைகள் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டு வந்த வாகனத்தை கியூ பிரிவு போலீசார் சந்தேகமடைந்து நிறுத்த முயன்ற போது வாகனத்தை ஓட்டி வந்த இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியைச் சேர்ந்த கலீல் ரகுமான் என்பவரின் மகன் சாகுல் ஹமீது (34) வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டி சென்றுள்ளார். இதையடுத்து உடனடியாக போலீசார் தங்களது காரில் ஏறி அந்த வாகனத்தை பின்தொடர்ந்து வேகமாக துரத்திச் சென்றுள்ளனர்.
போலீசார் சூரங்குடியில் அந்த வாகனத்தை மடக்கி பிடித்தனர். மேலும் அந்த வாகனத்தில் இருந்த 10 மூட்டைகள் சுறா மீன் இறக்கைகள், 11 மூட்டைகள் திருக்கை மீன் பூ உள்ளிட்டவற்றை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை இலங்கைக்கு கடத்த முயன்றபோது சிக்கியது. இந்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.80 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த சாகுல் ஹமீது-விடம் எங்கிருந்து இந்த பொருட்கள் கொண்டு வரப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி வேம்பாரில் இருந்து கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தூரம் கடத்தல் வாகனத்தை கியூ பிரிவு போலீசார் பின்தொடர்ந்து சூரங்குடியில் வைத்து மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
TL