இலங்கையின் நீதித்துறை தற்போது எதிர்கொண்டு வரும் சவால்கள் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி யசந்த கோடகொட தனது கருத்துகளை வெளியிட்டார்.
இதன்போது, நீதிபதிகள் மிகவும் குறுகிய காலத்திற்குள் மிகுந்த அர்ப்பணிப்புடன் தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், குறிப்பாக பிணை வழங்குவது போன்ற மிகுந்த உணர்வுபூர்வமான விடயங்களில் அவர்கள் கடும் அழுத்தங்களை எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த விமர்சித்துள்ளார்.
நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு தீர்வு காண புதிய யோசனைகளை முன்வைக்கும் முன், தற்போது நிலவும் நீதிபதி காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
உச்சநீதிமன்ற நீதிபதி யசந்த கோடகொட கூறியதாவது:
“இன்றும் இந்த நாட்டில் சில நீதவான்களும் நீதவதிகளும் தங்களது கடமைகளை நிறைவேற்ற ஒரு பால்-பாயிண்ட் பேனா முழுவதும் தேயும் வரை எழுதுகிறார்கள். ஒரு பால்-பாயிண்ட் பேனாவால் சுமார் 2.5 கிலோமீட்டர் நீளமான கோடு வரைய முடியும் என்று கூறப்படுகிறது. அவர்கள் எடுக்க வேண்டிய தீர்மானங்களில் மிகவும் உணர்வுபூர்வமானது, ஒரு சந்தேகநபருக்கு பிணை வழங்க வேண்டுமா அல்லது அவரை விளக்கமறியலில் வைக்க வேண்டுமா என்பதுதான்.
இந்த விடயத்தை மிகவும் ஆழமாக ஆய்வு செய்து, தங்களுக்கு கிடைக்கும் மிகக் குறுகிய நேரத்திற்குள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருக்கிறது. அந்த நேரத்தில் அவர்களின் மனதில் தோன்றும் அம்சங்கள், அவர்கள்முன் வைக்கப்படும் சமர்ப்பணங்கள் மற்றும் ஆவணங்களில் வெளிப்படும் தகவல்கள் ஆகிய அனைத்தையும் மிகக் குறுகிய நேரத்தில் ஆராய்ந்து அவர்கள் முடிவெடுக்க வேண்டியுள்ளது.
அந்த முடிவை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளலாம்; ஏற்காமலும் இருக்கலாம். ஏனெனில் பொதுமக்கள் இந்த விடயங்களை எங்களைப் போல தெளிவான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. அவர்கள் இதைப் பார்க்கும் கண்ணாடி சாதாரண லென்ஸுடன் கூடியது அல்ல; நிறமூட்டப்பட்ட (Tinted) கண்ணாடி போன்றது. எனவே எங்களை மிகவும் எளிதாக தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.”
The post இலங்கையின் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் – யசந்த கோடகொட appeared first on LNW Tamil.