இலங்கையின் 16வது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய
இலங்கையின் 16வது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று கடமைகளை ஆரம்பித்தார்.
இலங்கை வரலாற்றில் பெண் பிரதமராக நியமிக்கப்படும் மூன்றாவது நபர் இவராவார்.
தெற்காசிய அரசியல் வரலாற்றில் குடும்ப அரசியல் பின்னணியின்றி பிரதமராக தெரிவு செய்யப்படட முதலாவது பெண்மணியாக இவர் கருதப்படுகின்றார்.
1970ம் ஆண்டு கொழும்பில் பிறந்த இவர், பிஷொப் கல்லூரியின் பழைய மாணவியாவார். டெல்லி பல்கலைக்கழகத்தில்; விஞ்ஞானத்துறை பட்டத்தைப் பூர்த்தி செய்ததன் பின்னர், அவுஸ்திரேலியாவின் நியு-சவுத்-வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள மக்குவெரி பல்கலைக்கழகத்தில் முதுமானி கற்கையை நிறைவு செய்தார்.
பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியல் துறையில் கலாநிதி பட்டத்தை பிரதமர் ஹரினி அமரசூரிய பூர்த்தி செய்தார்.
குடும்ப சுகாதாரம், கல்வி, மகளிர் உரிமை, மானுடவியல் உட்பட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் கொண்ட கல்வியலாளராகவும் இவர் அடையாளப்படுத்தப்படுகிறார்.
இலங்கையில் உள்ள மிகச் சிறந்த சமூக மானுடவியலாளர்களில் ஒருவராக பிரதமர் ஹரினி அமரசூரிய கருதப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.
இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.