இலங்கையில் வேலையின்மைப் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக வேலையின்மை காணப்படுவதாகவும், ஆசியாவிலேயே கல்வி கற்ற இளைஞர்கள் மத்தியில் இலங்கையில் அதிக வேலையின்மை வீதம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி கற்ற இளைஞர்களில் 43 சதவீதமானோருக்கு வேலைவாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
“தற்போது இந்த நிலைமை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இலங்கையில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 18 இலட்சம் பேர் உள்ளனர். இவர்களும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புச் சந்தையில் இணைகின்றனர். ஆனால் அவர்களுக்குப் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை.
மருத்துவத் துறையில் தற்போது சுமார் 7,000 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில், மக்களுக்கு எவ்வாறு தரமான மருத்துவ சேவையை வழங்க முடியும்?
இதேபோன்ற நிலைமை இலங்கையின் பல்கலைக்கழகங்களிலும் காணப்படுகிறது. தற்போது முக்கிய பிரச்சினை புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குவது அல்ல. ஏற்கனவே உள்ள பல்கலைக்கழகங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய தரத்தில் தொடர்ந்து பராமரிப்பதே அவசியமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
The post இலங்கையில் வேலையின்மைப் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது appeared first on LNW Tamil.