இலங்கையில் HSBC உலகளாவிய சேவை மையத்தை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தனிப்பட்ட மற்றும் தேசிய வேண்டுகோள் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க விடுத்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த நிறுவனத்துக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு,
குழுமத் தலைவர் மற்றும் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி
HSBC Holdings plc
மதிப்பிற்குரிய குழுமத் தலைவர் மற்றும் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி அவர்களுக்கு,
இலங்கையில் HSBC உலகளாவிய சேவை மையத்தை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு விடுக்கும் தனிப்பட்ட மற்றும் தேசிய வேண்டுகோள்
HSBC நிறுவனத்தின் மீது கொண்டுள்ள நிலையான மரியாதையுடனும் ஆழ்ந்த தனிப்பட்ட அக்கறையுடனும், HSBC Electronic Data Processing Lanka நிறுவனத்தை மூடி, அதன் செயற்பாடுகளை இலங்கைக்கு வெளியே மாற்றுவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மனப்பூர்வமாகக் கேட்டுக்கொள்கிறேன்.
2001–2004 காலப்பகுதியில் இலங்கையின் வர்த்தக மற்றும் வாணிப அமைச்சராகப் பணியாற்றியபோது, இந்த முதலீட்டை எமது நாட்டிற்குக் கொண்டுவருவதற்கு நான் தனிப்பட்ட முறையில் முன்முயற்சி எடுத்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள் என நம்புகிறேன். எனது கருத்துக்களுக்குச் செவிசாய்த்து, எமது மக்களின் திறனை அங்கீகரித்து, அந்த நம்பிக்கையை கணிசமான முதலீடாகவும் இலங்கையின் மனிதவள அபிவிருத்தியாகவும் மாற்றியமைத்த HSBC நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
2004ஆம் ஆண்டில் கொழும்பு 01 உலக வர்த்தக மையத்தில் இந்தச் செயற்பாடுகளை ஆரம்பித்ததும், பின்னர் விரிவடைந்த செயற்பாடுகளுக்காக எனது தேர்தல் தொகுதியான கொழும்பு மாவட்டத்தின் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை, இலக்கம் 439இல், நிறுவனத்தின் தேவைகளுக்கேற்ப விசேடமாக நிர்மாணிக்கப்பட்ட வசதிகளை ஏற்படுத்தியதும், அந்த முயற்சிகளுக்குக் கிடைத்த மிகவும் அர்த்தமுள்ள அங்கீகாரமாகும். இதன் மூலம் நீடித்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சர்வதேச வாய்ப்பு எமது சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நம்பிக்கைக்காக நான் என்றும் நன்றியுடையவனாக இருப்பேன்.
பின்னர், 2022ஆம் ஆண்டில் கொழும்பு 02 யூனியன் பிளேஸ் மற்றும் கொழும்பு 05 மிரேகா டவர் உள்ளிட்ட பல இடங்களுக்கு HSBC தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியது. HSBCயின் அடிப்படைக் கட்டடப் பொறியியல் வழிகாட்டுதல்களுக்கும் தரநிலைகளுக்கும் ஏற்ப, தேவைகளுக்கேற்ற வகையில் விசேடமாக உருவாக்கப்பட்ட இவ்வசதிகள், இலங்கையில் நிறுவனத்தின் விரிவாக்கத்தையும் பணியாளர் எண்ணிக்கையையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தன.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தக் கூட்டாண்மை தொழில்வாழ்க்கைகளை உருவாக்கி, குடும்பங்களுக்கு ஆதரவளித்து, ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்குச் சர்வதேச மதிப்புடைய திறன்களை வழங்கியுள்ளது. முதலீடாக ஆரம்பித்த இந்த முயற்சி, எமது சிறிய நாட்டிற்கும் முன்னோடியாக விளங்கிய HSBC வர்த்தக நாமத்திற்கும் பெருமையையும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கியது. எமது இளைஞர்களால் உலகளாவிய தரநிலைகளைப் பூர்த்திசெய்து அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க முடியும் என்பதை இது நிரூபித்தது.
பின்னர் நிதி அமைச்சராகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் பணியாற்றி, தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகச் செயலாற்றும் நான், HSBC தனது பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்காக ஏற்றுள்ள பொறுப்புகளைப் புரிந்துகொள்கிறேன். செயற்பாட்டுச் செலவுகள், தேவையான பணியாளர்களைக் கிடைக்கச் செய்தல், செயற்பாட்டு அளவு மற்றும் போட்டித்திறன் தொடர்பான கவலைகளுக்குத் தீவிரமான பதில் அவசியம். இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமா என்பதை ஒன்றிணைந்து ஆராய்வது, இந்த நீண்டகாலக் கூட்டாண்மைக்காக நாம் ஆற்ற வேண்டிய கடமை என நம்புகிறேன்.
2026 ஒக்டோபர் 07ஆம் திகதியிட்ட உங்கள் அறிவித்தல், முன்மொழியப்பட்ட இடமாற்றம் உலகளாவிய செயற்பாட்டு மாதிரி மீளாய்வின் அடிப்படையிலானது என்றும், அது இலங்கை நிறுவனத்தின் செயல்திறனைப் பிரதிபலிப்பதல்ல என்றும் தெளிவாகக் குறிப்பிடுகிறது. இந்த அங்கீகாரம் ஒரு மாற்றுவழியை ஆராய்வதற்கான வலுவான காரணத்தை வழங்குகிறது. இங்கு இரு தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட திறனும் அர்ப்பணிப்பும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலான HSBC வர்த்தக நாமத்தின் பாரம்பரியமும், தொடர்ந்தும் முதலீடு செய்வதற்கான பெறுமதிமிக்க அடித்தளங்களாக உள்ளன.
அந்த அறிவித்தலின்படி, 2026 செப்டெம்பர் 30ஆம் திகதியன்று பணியாளர் எண்ணிக்கை 1,659 ஆக இருந்தது. எனினும், HSBC HDPL எனப்படும் HSBC உலகளாவிய சேவை மையம், அதன் உச்ச வளர்ச்சிக் காலத்தில் சுமார் 4,500 இளம் இலங்கையர்களுக்குப் பயனுள்ள வேலைவாய்ப்புகளை வழங்கியிருந்தது.
ஒவ்வொரு வேலைவாய்ப்பிற்குப் பின்னாலும் ஒரு குடும்பமும், பல பொறுப்புகளும், பல ஆண்டுகால அர்ப்பணிப்பினால் கட்டியெழுப்பப்பட்ட எதிர்காலமும் உள்ளன.
இந்தப் பணியாளர்களுக்கும், HSBCயில் இணைந்து பணியாற்றவும் பயிற்சி பெறவும் எதிர்பார்த்திருப்போருக்கும், இந்த மூடல் அவர்களது எதிர்காலக் கனவுகள் சிதைவடையும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. பிள்ளைகளின் கல்வி, வீட்டுவசதி தொடர்பான நிதிப் பொறுப்புகள், பெற்றோரைப் பராமரித்தல் மற்றும் சொந்த நாட்டிலேயே நிறைவான தொழில்வாழ்க்கையைத் தொடருதல் ஆகியவற்றில் இது பெரும் நிச்சயமின்மையை உருவாக்குகிறது.
நான் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்காவிட்டாலும், இந்த முதலீட்டைப் பாதுகாப்பதற்கான எனது அர்ப்பணிப்பு குறையவில்லை. இலங்கையில் HSBCயின் செயற்பாடுகளைத் தக்கவைத்து, அவற்றிற்குப் புத்துயிரளிக்கக்கூடிய ஒவ்வொரு நடைமுறை நடவடிக்கையையும் முன்னெடுக்க, அரசாங்கம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் துறைசார் பங்காளர்களுடன் ஆக்கபூர்வமாக இணைந்து செயலாற்ற என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன். பொறுப்புடன் வழங்கக்கூடிய அதிகபட்ச ஆதரவையும் அனுகூலங்களையும் பெற்றுக்கொடுக்கவும், போட்டித்திறனுடன் செயலாற்றுவதற்கான தடைகளை நீக்கவும் உறுதியாக முன்நிற்கத் தயாராக உள்ளேன். எமது மக்களுக்கான வாய்ப்புகளைப் பாதுகாப்பது அரசியல் வேறுபாடுகளைக் கடந்த தேசியப் பொறுப்பாகும்.
குறிப்பாக எமது இளைய தலைமுறையினரின் சார்பில் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். ஒரு சர்வதேச நிறுவனத்திற்குள் தமது முழுத் திறனையும் வெளிப்படுத்தவும், அறிவைப் பெறவும், பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்தவர்களுடன் பணியாற்றவும், தொழில்சார் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், உலகுடன் இணைந்த தொழில்வாழ்க்கைகளை அமைத்துக்கொள்ளவும் HSBC வழங்கிய வாய்ப்புகளுக்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
இந்தச் செயற்பாடுகளிலிருந்து வெளியேறும் முடிவு, இளம் இலங்கையர்கள் தமது தாய்நாட்டிலேயே தங்கியிருந்து தமது இலட்சியங்களை நிறைவேற்றுவதற்கான முக்கியமான ஒரு பாதையை மூடிவிடும். அவர்களது அபிலாஷைகள் எமது கலந்துரையாடல்களில் மைய இடத்தைப் பெற வேண்டும்.
எனவே, திட்டமிடப்பட்ட இடமாற்றம் மீளமுடியாத நிலையை அடைவதற்கு முன்னர், இந்த முடிவை மீண்டும் பரிசீலித்து, அவசரமானதும் குறிப்பிட்ட காலவரையறைக்குட்பட்டதுமான கலந்துரையாடலுக்கு இடமளிக்குமாறு HSBC குழுமத் தலைமையை மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். செலவுகள், ஆட்சேர்ப்பு, பயிற்சி, உட்கட்டமைப்பு மற்றும் கொள்கை ஆகியவற்றில் தேவைப்படும் குறிப்பிட்ட மாற்றங்களை அடையாளம் கண்டு, இலங்கைச் செயற்பாடுகளைத் தக்கவைப்பதற்கும் மீண்டும் முதலீடு செய்வதற்குமான நம்பகமான முன்மொழிவை உருவாக்குவோம்.
இலங்கை ஆழமான நெருக்கடிகளை வெற்றிகொள்ளவும், நீண்டகால பலவீனங்களைத் திருத்தவும், தனது எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் முயற்சித்து வருகிறது. HSBC போன்ற நீண்டகாலப் பங்காளர்களின் ஆதரவு மிகவும் அவசியமாக இருப்பது இத்தகைய தருணத்தில்தான். HSBCயின் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதுடன், கூட்டாண்மை, விடாமுயற்சி மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் மீட்சியை அடைய முடியும் என்ற வலுவான செய்தியையும் வழங்கும்.
அந்த உணர்வுடன், தனியொரு செயற்பாட்டுப் பிரிவின் இருப்புநிலைக் குறிப்பைத் தாண்டி, இந்த முடிவின் பரந்த தேசிய முக்கியத்துவத்தையும் கருத்தில்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். வர்த்தக ரீதியான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட வேண்டும். அதேவேளை, இங்கு உருவாக்கி வளர்க்கப்பட்ட திறமை, விசுவாசம் மற்றும் அனுபவத்தின் பெறுமதியையும், அவற்றைச் சார்ந்துள்ள நம்பிக்கைகளையும் அபிலாஷைகளையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தை இலங்கைக்குக் கொண்டுவர நான் முன்முயற்சி எடுத்தபோது, எமது மக்கள் மீதும், அவர்களது திறனை உணர்ந்துகொள்ள HSBC கொண்டிருந்த விருப்பத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தேன். அந்த நம்பிக்கை இன்றும் அதே வலிமையுடன் உள்ளது.
முன்னோக்கிச் செல்வதற்கான வழியைக் கண்டறிய எமது திறமைகளையும், வளங்களையும், உறுதியையும் ஒன்றிணைப்போம். HSBC தனது வெளியேறும் முடிவை மறுபரிசீலனை செய்து, இந்தக் கடினமான காலப்பகுதியில் இலங்கையுடன் நிலைத்திருந்து, இருபது ஆண்டுகளுக்கும் முன்னர் நாம் ஆரம்பித்த கூட்டாண்மைக்குப் புத்துயிரளிக்க வேண்டும் என்பதே எனது இதயபூர்வமான வேண்டுகோளாகும். நாம் இணைந்து உருவாக்க வேண்டியவை இன்னும் ஏராளமாக உள்ளன.
தங்கள் உண்மையுள்ள, அனைவருக்கும் சேவையாற்ற உறுதிபூண்ட,
ரவி கருணாநாயக்க, பா.உ.
நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னாள் நிதி, வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தக மற்றும் வாணிப, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்
The post இலங்கையில் HSBC சேவை மையத்தை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்க! appeared first on LNW Tamil.