கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 39 ட்ரோன் விமானங்கள் மற்றும் 16 மைக்ரோஃபோன்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார விளக்கமளித்துள்ளார்.
குறித்த உபகரணங்கள் சிங்கப்பூரிலிருந்து குடும்பத்திற்குச் சொந்தமான வணிகத்திற்காகக் கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRC) மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAA) அனுமதிகள் பெறப்பட்டிருந்ததாகவும், பாதுகாப்பு அமைச்சின் (MoD) உரிய அனுமதி பெறப்படாததே பிரச்சினைக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த பொருட்கள் சுங்க அனுமதி பெறாமல் கொண்டுவரப்பட்டதாகவும், கடத்தல் பொருட்களாகக் கொண்டுவரப்பட்டதாகவும் வெளியாகும் தகவல்கள் தவறானவை எனவும் அவர் மறுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
தனது மகன் மற்றும் மனைவி பணிப்பாளர் பதவி வகிக்கும் குடும்ப வணிகம் ஒன்று காணப்படுவதாகவும், அந்த நிறுவனம் கமராக்கள் மற்றும் ட்ரோன்களை வாடகைக்கு வழங்குதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வணிகத்திற்காகவே சிங்கப்பூரிலிருந்து ட்ரோன்கள் மற்றும் மைக்ரோஃபோன்கள் கொண்டுவரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் பொருட்கள் உரிய முறையில் அறிவிக்கப்பட்டு அனுமதி பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், தேவையான அனுமதிகளில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி மாத்திரம் போதுமானதாக இல்லாததால் பொருட்களைத் தடுத்து வைப்பதற்கான அறிவித்தல் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மைக்ரோஃபோன்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ட்ரோன்களை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நளின் பண்டார எம்.பி. இந்த விளக்கத்தை நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
The post 39 ட்ரோன்கள், 16 மைக்ரோஃபோன்கள் – நளின் பண்டார விளக்கம்! appeared first on LNW Tamil.