இலங்கை – அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் போட்டி: இலங்கை அணி வெற்றி
இலங்கை – அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் அயர்லாந்தின் பெல்பாஸ்ற் நகரில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி 46 ஆவது ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து, 122 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. அச்சினி குலசூரிய, சமரி அத்தப்பத்து ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்கள்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 23 ஆவது ஓவரில் 2 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து, வெற்றி இலக்கைத் தாண்டியது. சமரி அத்தப்பத்து, ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆகியோர் தலா 48 ஓட்டங்களை எடுத்தார்கள்.
மூன்று போட்டிகளைக் கொண்ட சுற்றுத்தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றமையினால் அயர்லாந்து அணி இரண்டுக்கு – ஒன்று என்ற வித்தியாசத்தில் சுற்றுத்தொடரை தனதாக்கிக் கொண்டுள்ளது.
இதேவேளை, சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் மன்செஸ்டர் நகரில் இன்று ஆரம்பமாகிறது. இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.45ற்கு போட்டி ஆரம்பமாக இருக்கின்றது.
இறுதியாக இடம்பெற்ற ஐந்து ரெஸ்ட் போட்டிகளில் இரண்டு அணிகளும் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து, 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு தனஞ்செய டீ சில்வா தலைமை தாங்குகிறார். ஓலி பொப் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை வழிநடத்தவுள்ளார்.
மிலான் ரத்hயக்க இன்றைய போட்டியில் அறிமுக வீரராக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.