Home » இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்திலிருந்து விடுபடவில்லை

இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்திலிருந்து விடுபடவில்லை

Source

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை என்றும் சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்த வெற்றிகளைப் பாதுகாப்பது முக்கியம் என்றும்; சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் (Julie Kozack) குறிப்பிட்டுள்ளார்.

அதனை எதிர்வரும் தேர்தலில் இலங்கை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் ஏற்பட்டுள்ள மோசமான நெருக்கடியிலிருந்து இலங்கைக்கு மீள்வதற்கான வாய்ப்பை வழங்க இந்த வேலைத்திட்டத்தின் இலக்குகளை அடைவது மிகவும் முக்கியமானது என்றும் ஜூலி கொசெக் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் (Julie Kozack) கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆலோசனை மற்றும் நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பான வேலைத்திட்டத்தின் இரண்டாவது மதிப்பாய்வை எமது குழு நிறைவு செய்துள்ளது. அதன் மூலம் இலங்கைக்கு சுமார் 336 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி விடுவிக்கப்பட்டுள்ளது.

வேலைத்திட்டத்தின் செயல்திறன் வலுவாக உள்ளது. மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களின் பிரதிபலன்கள் புலப்படுகின்றன. பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது.

பணவீக்கம் குறைந்து வருகிறது. அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் அரச வருமானம் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இன்னும் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் உள்ளது. எனவே, மறுசீரமைப்புகளைத் தொடர வேண்டியது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது மீளாய்வுக்கான காலம் குறித்து தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படும். எனவே, ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்த பின்னர்,

புதிய அரசாங்கம் அல்லது இலங்கை மக்கள் செய்யும் தெரிவின் அடிப்படையில், வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களைத் தொடர எதிர்பார்க்கிறோம்.

அதன்படி செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம் என சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image