இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும் காண்பதே எதிர்பார்ப்பு – ஜனாதிபதி தெரிவிப்பு
இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்தாக மீண்டும் காண்பதே எதிர்பார்க்கும் என்றும், அதற்கு அவசியமாக அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசு பெற்றுக்கொடுக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
அத்துடன், அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாகப் பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அரசியல்வாதிகள் விளையாட்டுக் கழகங்களில் உயர் பதவிகளை வகிப்பதைத் தடுக்க முடியுமானால் சிறந்தது என்றும் கூறினார்.
கொழும்பு ஷங்ரீலா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற சிங்கள விளையாட்டுக் கழகத்தின் 125ஆவது ஆண்டு பூர்த்தி விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் தெரிவித்தார்.
சிங்கள விளையாட்டுக் கழகத்தின் 125 வருட வரலாற்றைக் குறிக்கும் வகையில் புத்தகமும் முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.
சர்வதேச கிரிக்கட் களத்தில் இலங்கை அணியை வழிநடத்திய சிங்கள விளையாட்டுக் கழகத்தின் வீரர்களை ஜனாதிபதி இதன்போது பாராட்டியதுடன், அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இவ்விழாவில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
“றோயல், சென். தோமஸ், வெஸ்லி உள்ளிட்ட பாடசாலைகளில் இருந்து கிரிக்கெட்டில் இணைந்தவர்கள் அனைவரும் இங்கு வந்து சிங்கள விளையாட்டுக் கழகத்துடன் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேபோன்று எனது பாட்டனாரான மீதெனிய அதிகாரம், எனது தாத்தா சி.எல். விக்கிரமிசிங்க உட்பட அக் காலத்தைச் சேர்ந்த பலரும், இலங்கையர் என்ற அடையாளத்தை நிலைநாட்ட விரும்பியதாலேயே சிங்கள விளையாட்டுக் கழகத்தில் இணைந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் எனது தந்தையாரும் இணைந்துக்கொண்டார்.
அன்று இவ்வாறான விளையாட்டுக் கழகங்களை உருவாக்கினோம். தமிழ சமூகமும் விளையாட்டுக் கழகங்களை உருவாக்கின. அவை இன மோதலுக்காக அன்றி, பல்வேறு கழகங்கள் வாயிலாக தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் முயற்சியாகும். அவை மதம் அல்லது குலத்தை மையப்படுத்தியவை அல்ல. மாறாக மொழி மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டவையாகும். மலாயர்களும் தங்களுக்காக கழகத்தை உருவாக்கியிருந்தனர். அவற்றில் சிங்களவர், தமிழர், மலாயர் என அனைவரும் ஒன்று சேர்ந்துக்கொண்டனர். பின்னாளில் அனைவரும் ஒன்றிணைந்து பொது அடையாளத்தைப் பெற்றுக்கொண்டோம்.
சிங்கள விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர்களாக எமது கட்சியின் தலைவர்களும் செயற்பட்டுள்ளனர். டி.எஸ். சேனாநாயக்க , முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவும் தலைமைப் பதவி வகித்துள்ளனர். இது எமக்கு கௌரவமாகும். பிற்காலத்தில் உங்கள் விளையாட்டுக் கழகத்தில் நானும் உறுப்பினராகச் சேர்ந்தேன். ஆனால், ஒரு அரசியல்வாதியாக நான் அதிலிருந்து விலகியிருக்க தீர்மானித்தேன். இன்றைய அரசியல் நிலவரம் டி.எஸ்.சேனநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் இருக்கவில்லை.
விளையாட்டுக் கழகங்களில் அரசியல்வாதிகளுக்கு உயர் பதவிகள் வழங்காமல் இருப்பது அனைவருக்கும் நல்லதாகும் என நம்புகின்றேன். அதேபோல் அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக வைத்திருப்பது காலோசிதமானதாகும்.
அதனால் நாம் விளையாட்டிலிருந்து விலகி இருக்கிறோம் என்று கூறவில்லை. உங்களின் தேவைகள் குறித்து நாம் கவனம் செலுத்துவோம். நமது தலைவர்களின் சம்பிரதாயங்களை பேண வேண்டியது கடமையாகும். எனவே, சிங்கள விளையாட்டு கழகத்திற்குச் சொந்தமான காணியை 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு தேவையான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
அதேபோல், இலங்கை கிரிக்கெட்டை பாதுகாப்பதோடு, கிரிக்கெட்டில் இலங்கை முன்னணி இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
இந்த வருடம் கிரிக்கெட் வளர்ச்சிக்காக அரசு ஒரு பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. அடுத்த வருடம் மேலும் அதிக தொகையை வழங்குவோம். அந்தப் பணம் உங்கள் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினரான சிதத் வெத்தமுனி தலைமையிலான அறக்கட்டளையால் பேணப்படும், அதனூடக கிராமப்புறப் பாடசாலைகளில் கிரிக்கெட்டை மேம்படுத்தவும், கிரிக்கெட் போட்டிகளை நடத்தி கிராமிய அளவில் கிரிக்கெட்டை பலப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
1000 -1500 பாடசாலைகளில் கிரிக்கெட்டை மேம்படுத்த வேண்டும். பின்னர் தேசிய அணிக்கு தேவையான கிரிக்கெட் வீரர்களைத் தெரிவு செய்வதற்கான குழாம் ஒன்றை உருவாக்க வேண்டும். கிரிக்கெட் விளையாட்டை பலப்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இப்பணிகளில் கிரிக்கெட் சபை மற்றும் விளையாட்டுக் கழகங்கள் மீது பெரும் பொறுப்பு சார்ந்துள்ளது.
அதேநேரம் சிங்கள விளையாட்டுக் கழகம் இந்த நாட்டில் கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்புக்காக நன்றி தெரிவிக்கின்றேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையை கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த நாடாக மாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.
ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, சுற்றுலா மற்றும் காணி , இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் சம்மி சில்வா, சிங்கள கிரிக்கெட் சபையின் தலைவர் இந்துனில் டி சில்வா, செயலாளர் வசந்த விஜேசேகர,பொருளாளர் நிலங்க பீரிஸ், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், சிங்கள கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர்கள், கிரிக்கெட் அணி வீரர்கள், முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் நசார் ஹூசைன், சர்வதே கிரிக்கெட் சபையின் போட்டி நடுவர் ரஞ்சன் மடுல்கல்ல உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.