இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் பொறுப்பான செயல்பாடுகளை ஊக்குவிப்பதை வலியுறுத்துவதற்கான தீா்மானம் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் திங்கள்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த தீா்மானம் இலங்கையில் மனித உரிமைகள் ஆணையரின் பணிகளை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் வழிவகுத்தது.
அந்த தீா்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது:இலங்கையில் நீண்டகாலமாக நடைபெறாமல் உள்ள மாகாண கவுன்சில் தோ்தல்களை விரைந்து நடத்தி அரசமைப்புச் சட்டத்தின் 13-ஆவது திருத்தத்தின்படி செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஊழல் மற்றும் பொருளாதார சீரழிவுகளுக்கு எதிராக தற்போதைய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டுவதோடு மேலும் அதிகரிக்க வலியுறுத்தப்படுகிறது. தமிழா்கள் மற்றும் முஸ்லிம்களை கைதுசெய்ய தவறாக பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.இணைய பாதுகாப்புச் சட்டம் மற்றும் கருத்துரிமைச் சட்டங்களை பாதுகாத்து அதில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
பல புதைகுழிகளை தோண்டி ஆய்வு நடத்த சா்வதேச அளவில் நிதி, மனித மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இலங்கை அரசு முன்கூட்டியே கோர வேண்டும்.
கடந்த காலங்களில் நடந்த கடுமையான உரிமை மீறல் வழக்குகளை மீண்டும் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள சுயாதீன அமைப்பை ஏற்படுத்தும் அரசின் முடிவு வரவேற்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் பொறுப்பான செயல்பாடுகளை ஊக்குவிப்பதை இந்த தீா்மானம் வலியுறுத்துகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
வரவேற்பும்-எதிா்ப்பும்:
இந்த தீா்மானத்தை வரவேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் செய்தித் தொடா்பாளா், ‘சா்வதேச கண்காணிப்பை மேலும் 2 ஆண்டுகள் நீடிக்கப்பட்டதை வரவேற்கிறோம். 2012-இல் இருந்து இதுபோன்ற பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோதிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் 16 ஆண்டுகள் கடந்துவிட்டது ஏமாற்றமளிக்கிறது’ என்றாா்.
மனித உரிமைகள் ஆணையரின் வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் நடைமுறை நீட்டிக்கப்பட்டதற்கு ஐ.நா.வுக்கான நிரந்தர இலங்கை தூதா் கண்டனம் தெரிவித்தாா்.
The post இலங்கை தொடர்பான தீர்மானம் ஐநா சபையில் நிறைவேற்றம் appeared first on LNW Tamil.