இலங்கை பொருளாதார ரீதியில் மேலும் முன்னேற வேண்டும் – IMF
இலங்கை இதுவரை பாரிய முன்னேற்றத்தை பெற்றுக்கொண்டாலும், பொருளாதார ரீதியில் மேலும் முன்னேற்ற காண வேண்டிய நிலை உள்ளதென்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. மிகவும் கடினமான காலகட்டத்தில் பெற்றுக்கொண்ட வெற்றியை பாதுகாப்பது முக்கியமாகும்.
இதுவிடயம் தொடர்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியை மேலும் பேணுவது அவசியம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜூலி கொசாக் அம்மையார் தெரிவித்துள்ளார்.
கடந்த 12ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபை 2024 நான்காம் இலக்கத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கி வரும் நிதி உதவி மற்றும் விரிவாக்கப்பட்ட நிதி உதவிகள் தொடர்பான வேலைத்திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இதனால் இலங்கைக்கு மேலும் 336 மில்லியன் டொலர் கடனுதவி கிடைக்கவுள்ளது. இந்த வேலைத்திட்டம் இதுவரை மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் சிறந்த பெறுபேறுகளை தருகின்றன.
இதன் பிரதிபலன்களை பொதுமக்களும் தற்சமயம் பெற்று வருகின்றனர். எனவே இந்த விடயங்களை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.