இஸ்ரேல் பக்கம் நிற்கும் மேற்குலக நாடுகள் இலங்கைமீது போர்க்குற்றங்களை சுமத்த முடியாது
வன்னியில் நடைபெற்ற போருடன் காஸா போரை ஒப்பிடுவது தவறு. இன்று ஹமாஸ் அமைப்பை எதிர்க்கும் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கை போரில் புலிகள் பக்கமே நின்றன என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இஸ்ரேல் – பலஸ்தீன போர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தி பாராளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்
“இலங்கை 2 ஆயிரத்து 500 ஆண்டுகளாக ஒற்றாட்சி நாடாகவே இருந்துவருகின்றது. இதற்காக எமது முதாதையர்கள் உயிர் தியாகம்கூட செய்துள்ளனர்.
எமது நாட்டை இரண்டாக்குவதற்காகவே புலிகள் போரிட்டனர். அந்த போரை நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம். ஹமாஸ் அமைப்பின் நோக்கம் வேறு, பலிகளின் நோக்கம் வேறு. எனவே , காஸா போருடன் இலங்கை போரை ஒப்பிடமுடியாது.
ஹமாஸ் அமைப்பை பயங்கரவாதிகள் எனக் கூறி காஸா யுத்தத்தில் இன்று இஸ்ரேல் பக்கம் நிற்கும் மேற்குலக நாடுகள் அன்று ஈழப்போரில் புலிகளுக்காக முன்நின்றன. பிரபாகரனை காப்பாற்றிக்கொள்வதற்காக அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் முயற்சித்தன.
பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார். பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் வந்தார். சமாதான உடன்படிக்கைக்கு முன்மொழிவு செய்யப்பட்டது. அதற்கு இணங்கி இருந்தால் இலங்கையில் இன்றும் குண்டுகள் வெடித்துகொண்டுதான் இருந்திருக்கும்.
ஆனால் காஸாவில் போர் நிறுத்தத்துக்கு மேற்குலகம் விரும்பவில்லை. ஐநாவில் அந்த யோசனையை ஏற்கவில்லை. இஸ்ரேல் பக்கம் நிற்கும் மேற்குலகமே இலங்கைமீது போர்க்குற்றங்களை சுமத்திவருகின்றன.” – என்றார்.