இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அங்கு வாழும் இலங்கையர்கள் மற்றும் இஸ்ரேலிய மக்கள் மீது ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) அமைச்சரவைக்கு அறிவித்தார்.
அமைச்சரவைக்கு விசேட அறிவிப்பொன்றை முன்வைத்த ஜனாதிபதி, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு , அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும், இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாகவும் ஊழியர்களாகவும் வருகை தந்துள்ள இஸ்ரேலியர்கள் தமது நாட்டுக்குத் திரும்புவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் இலங்கையில் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குமாறும் பொலிஸ் திணைக்களத்திற்கு ஜனாதிபதி அறிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் எனும் இரு நாட்டுக் கொள்கைக்கான இலங்கையின் நீண்டகால ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஜனாதிபதி, பலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், இவ்வாறான தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்த நெருக்கடி நிலை உலகளாவிய எரிபொருள் விலையில் ஏற்படுத்தக்கூடிய கடுமையான தாக்கத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஆபிரிக்க ஒன்றியத்தின் பரிந்துரையின் படி, இந்த மோதலை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்தும் இடம்பெற்று வரும் இந்த மோதல்கள் காரணமாக எரிபொருளின் விலையில் நீண்டகால அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், இது இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.