Home » ஈழத் தமிழர் இனப்படுகொலை, போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச அரங்கில் உரத்து குரல் எழுப்பியவர் நவநீதம் பிள்ளை!

ஈழத் தமிழர் இனப்படுகொலை, போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச அரங்கில் உரத்து குரல் எழுப்பியவர் நவநீதம் பிள்ளை!

Source

2026-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை அம்மையாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர் இனப்படுகொலை மற்றும் சிங்கள அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச அரங்கில் உரத்து குரல் எழுப்பியவர் நவநீதம் பிள்ளை அம்மையார்.

முள்ளிவாய்க்கால்… ஈழத் தமிழர்களின் வரலாற்றில் ரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட பெயர். உயிரைக் காப்பாற்ற ஓடிய குழந்தைகள், பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார்கள், கணவனைத் தேடிய மனைவிகள், தங்களது குடும்பமே கண்முன்னே அழிந்ததைப் பார்த்து உயிர் தப்பியவர்கள் என 2009-ம் ஆண்டு ஈழ மண்ணில் நிகழ்ந்த மனிதப் பேரவலம் இன்றும் தமிழர்களின் மனங்களில் ஆறாத காயமாக இருக்கிறது.

அந்தப் பேரவலத்தின் பின்னணியில், இலங்கை அரசின் போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளை உலக நாடுகள் விசாரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் துணிச்சலாகக் குரல் எழுப்பியவர் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை அம்மையார்.

போர் முடிந்துவிட்டது என்று இலங்கை அரசு அறிவித்தபோது, போரில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு நீதி கிடைக்க வேண்டாமா என்ற கேள்வியை சர்வதேச அரங்கில் தொடர்ந்து எழுப்பியவர் அவர்.

தென்னாப்பிரிக்க மண்ணில் பிறந்த நவநீதம் பிள்ளை அம்மையாரின் குரல், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் எழுப்பிய நீதிக்கான கோரிக்கையை உலக அரங்கிற்குக் கொண்டு சென்ற முக்கியமான குரல்களில் ஒன்றாக அமைந்தது.

முள்ளிவாய்க்கால்… மறக்க முடியாத தமிழர்களின் துயரம்

2009-ம் ஆண்டு இலங்கைத் தீவில் தமிழர் தாயக நிலப்பரபுகளில் ஒன்றான வடக்குப் பகுதியில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போர், ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை துவம்சம் செய்து அழித்துப் போட்டது.

முல்லைத்தீவு, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருந்தன.

தங்குவதற்கு பாதுகாப்பான இடமில்லை. காயமடைந்தவர்களுக்குப் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. உணவு, குடிநீர், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு. எங்கு சென்றாலும் தாக்குதலில் சிக்கிவிடுவோமோ என்ற அச்சம்.

பொதுமக்கள் தஞ்சமடைந்த பகுதிகளிலும் மருத்துவமனைகளிலும் சிங்களப் பேரினவாத படையினரால் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகப் பின்னர் ஐ.நா. அறிக்கைகளில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

போரில் உயிரிழந்தவர்களின் முழுமையான எண்ணிக்கை இன்றுவரை உறுதியாகவில்லை. ஆனால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐ.நா. விசாரணைகளில் பதிவாகியுள்ளது.

ஒரு குடும்பத்தில் தந்தை இல்லை. இன்னொரு குடும்பத்தில் தாய் இல்லை. எத்தனையோ வீடுகளில் பிள்ளைகள் திரும்பி வரவில்லை.

போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று பதில் தேடும் குடும்பங்களின் வேதனை முடிவுக்கு வரவில்லை.

முன்னெச்சரிக்கை விடுத்த நவநீதம் பிள்ளை

2009-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி, இலங்கையின் போர்ப் பகுதிகளில் சிக்கியிருந்த பொதுமக்களின் நிலை குறித்து நவநீதம் பிள்ளை எச்சரிக்கை விடுத்தார்.

அப்போது அவர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

போர் நடைபெற்ற பகுதிகளுக்கு கண்காணிப்பாளர்களும் மனிதாபிமான உதவிப் பணியாளர்களும் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் அங்கு பொதுமக்கள் எதிர்கொண்ட துயரங்களின் முழுமையான விவரங்கள் வெளி உலகிற்குத் தெரியாமல் போகக்கூடும் என்று அவர் கவலை தெரிவித்தார்.

அப்போது முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப் பேரவலம் நிகழவில்லை. ஆனால் போர் தீவிரமடைந்து கொண்டிருந்த நிலையில், பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை அவர் முன்கூட்டியே வலியுறுத்தினார்.

போர் முடிந்தது… தமிழர்களின் கண்ணீர் வடியவில்லையே

2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சிங்களப் பேரினவாத அரசு தனது ராணுவ வெற்றியைக் கொண்டாடியது.

ஆனால் போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்த அறிவிப்பு எந்த ஆறுதலையும் தரவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்களைக்கூட அடையாளம் காண முடியாமல் போன குடும்பங்கள் இருந்தன. போரின்போது பிரிந்த உறவுகள் மீண்டும் ஒன்று சேர முடியாமல் தவித்தன. சரணடைந்தவர்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் என்னதான் நடந்தது என்ற கேள்விகள் எழுந்தன.

போர் முடிந்துவிட்டது என்பதால் இந்தக் கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட முடியுமா?

2009-ம் ஆண்டு மே 26-ந் தேதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அமர்வில் நவநீதம் பிள்ளை எழுப்பிய சர்வதேச விசாரணைக் கோரிக்கையின் பின்னணியில் இருந்தது இந்த காத்திரமான கேள்விதான்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் நடைபெற்றதாகக் கூறப்படும் கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பினார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையை எந்த அரசும் புறக்கணிக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசு போர் முடிந்துவிட்டதாக அறிவித்த சில நாட்களிலேயே, அந்தப் போரில் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. அரங்கில் வலியுறுத்தியிருந்தார் நவநீதம் பிள்ளை.

உலகின் மனசாட்சியை உலுக்கிய குற்றச்சாட்டுகள்

2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை இறுதிக்கட்டப் போர் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த வல்லுநர் குழுவின் அறிக்கை வெளியானது.
அந்த அறிக்கையில் இலங்கை அரசுப் படைகள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை.

பொதுமக்கள் வசித்த பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன. போரின் இறுதிக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன. விடுதலைப் புலிகள் மீதும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த அறிக்கையை வரவேற்ற நவநீதம் பிள்ளை, குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உயிரிழந்தவர்கள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. ஒவ்வொரு உயிரிழப்புக்குப் பின்னாலும் ஒரு குடும்பத்தின் இழப்பு இருக்கிறது. அந்த இழப்புகளுக்குக் காரணமானவர்கள் யார்? சட்டத்தை மீறியவர்கள் யார்? அவர்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடமை இல்லையா?
இத்தகைய கேள்விகளுக்குப் பதில் கிடைக்க வேண்டும் என்பதே நவநீதம் பிள்ளையின் தொடர் வலியுறுத்தலாக இருந்தது.

2013-ல் ஈழ மண்ணுக்குச் சென்ற நவநீதம் பிள்ளை

2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நவநீதம் பிள்ளை இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார். போர் முடிந்து 4 ஆண்டுகள் கடந்திருந்தாலும், ஈழத் தமிழர்களின் கண்ணீர் வடியவில்லை.

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் புகைப்படங்களுடன் நவநீதம் பிள்ளையைச் சந்திக்க நூற்றுக்கணக்கான தமிழர்கள் காத்திருந்தனர். தங்களது பிள்ளைகள், கணவர்கள், சகோதரர்களுக்கு என்ன நடந்தது என்பதை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆகஸ்ட் 27-ந் தேதி யாழ்ப்பாண நூலகம் முன்பு 1,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கண்ணீருடன் காத்திருந்தனர். ஆனால் நவநீதம் பிள்ளை பின்வாசல் வழியாக அழைத்துச் செல்லப்பட்டதால் அவரைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

முள்ளிவாய்க்காலுக்குச் சென்றபோது, ராணுவத்தினரின் முன்னிலையில் தங்களது துயரங்களைச் சொல்ல மக்கள் அஞ்சினர். அப்போது அவர்களிடம் “என் காதில் மெதுவாகச் சொல்லலாம்”என்று நவநீதம் பிள்ளை கூறினார்.

திருகோணமலையில் அவரைச் சந்திக்க முயன்ற தமிழர்கள் மிரட்டப்பட்டதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தடுக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இலங்கைப் பயணத்தின் முடிவில் ஆகஸ்ட் 31-ந் தேதி கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த நவநீதம் பிள்ளை, வடக்கு, கிழக்கில் ராணுவத்தின் அதிகப்படியான இருப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், பெண்களின் பாதுகாப்பு, மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்தார்.

போர் முடிந்து 4 ஆண்டுகள் கடந்த பின்னரும் தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற பதிலுக்காக ஈழத் தமிழர்கள் காத்திருந்த துயரத்தை, அவரது இந்தப் பயணம் மீண்டும் சர்வதேச அரங்கின் கவனத்திற்குக் கொண்டு சென்றது.

இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச விசாரணை முயற்சி

2014-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி நவநீதம் பிள்ளை தலைமையிலான ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் இலங்கை தொடர்பான முக்கிய அறிக்கையை வெளியிட்டது.

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான உள்நாட்டு விசாரணை நடைபெறவில்லை என்ற கவலை அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது.

போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தின் மூலம் இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இலங்கை அரசு எதிர்த்த சர்வதேச விசாரணை முயற்சி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அதிகாரப்பூர்வ நடவடிக்கையாக மாறியது. இந்த முயற்சிக்குப் பின்னால் நவநீதம் பிள்ளை அம்மையாரின் தொடர்ச்சியான அறிக்கைகளும் வலியுறுத்தல்களும் இருந்தன.

இனப்படுகொலை… நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழர்கள்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரை ஈழத் தமிழர் இனப்படுகொலை என்று தமிழ் அமைப்புகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து குறிப்பிடுகின்றனர்.

இனப்படுகொலை என்பது சர்வதேச சட்டத்தில் தனியான குற்றம். ஒரு இனத்தை முழுமையாகவோ அதன் ஒரு பகுதியையோ அழிக்கும் நோக்கம் இருந்தது என்பதும் சட்டரீதியாக நிரூபிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.

நவநீதம் பிள்ளை இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றதாக இறுதித் தீர்ப்பு வழங்கவில்லைதான்.. ஆனால் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை சுதந்திரமாக விசாரிக்க வேண்டும் என்ற ’தமிழரின் நியாய’ கோரிக்கையிலிருந்து அவர் பின்வாங்கவில்லை.

போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை தெரியவருவதும், குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதும் அவசியம் என்ற கோரிக்கையை சர்வதேச அரங்கில் தொடர்ந்து முன்வைத்தார்.

தென்னாப்பிரிக்க மண்ணில் பிறந்த தமிழ்ப் பெண்… ஈழத்துக்காக ஒலித்த குரல்

1941-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் தமிழ் வம்சாவளிக் குடும்பத்தில் பிறந்தவர் நவநீதம் பிள்ளை.

நிறவெறி ஆட்சியின் கொடுமைகளை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்காவில் மனித உரிமைகளுக்காகப் போராடியவர். பின்னர் நீதிபதியாகவும் சர்வதேச நீதிமன்றங்களில் முக்கியப் பொறுப்புகளிலும் பணியாற்றினார்.

2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையராகப் பணியாற்றினார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அவர் செயல்பட்டிருந்தாலும், ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்கள் தொடர்பாக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நினைவில் தனி இடத்தைப் பெற்றுள்ளன.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த குடும்பங்களின் இழந்த காலத்தைத் திருப்பித் தர முடியாது.

தாயை இழந்த குழந்தையின் துயரத்திற்கும், பிள்ளையை இழந்த தாயின் கண்ணீருக்கும் எந்த அறிக்கையும் முழுமையான ஆறுதலாகிவிட முடியாது.

ஆனால் அந்த உயிர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிவர வேண்டும். குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையர் என்ற பொறுப்பிலிருந்து தொடர்ந்து எழுப்பியவர் நவநீதம் பிள்ளை அம்மையார்.

ஈழத் தமிழர்களின் கண்ணீருக்கான நீதியைத் தேடும் நீண்ட பயணத்தில், தென்னாப்பிரிக்க மண்ணிலிருந்து சர்வதேச அரங்கில் ஒலித்த அந்தத் தமிழ்க் குரலுக்கு முக்கியமான இடம் இருக்கிறது.

இன்று அந்த ‘நீதிக்கான’ குரலுக்குதான் 2026-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது- சாலப் பொருத்தம்!

The post ஈழத் தமிழர் இனப்படுகொலை, போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச அரங்கில் உரத்து குரல் எழுப்பியவர் நவநீதம் பிள்ளை! appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both