அரசாங்கத்தின் புதிய சட்டங்கள் சர்வாதிகார ஆட்சியை உருவாக்கும் முயற்சி – சஜித் விசனம்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டம் (POCA) ஆகிய இரண்டும், சர்வாதிகார ஆட்சியின் கீழ் முழு நாட்டையும் ஒரே கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும், 2 கோடியே 20 இலட்சம் மக்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறுவதற்கும் மேற்கொள்ளப்படும் வெட்கக்கேடான முயற்சியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அடக்குமுறைச் சட்டங்கள் தொடர்பாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று (31) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கம்போடியாவின் பொல் பொட் ஆட்சியை இலங்கையில் நடைமுறைப்படுத்த முயற்சி
கம்போடியாவில் பொல் பொட் தலைமையிலான ஆட்சியை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்படுவதாகத் தெரிவித்த சஜித் பிரேமதாச, இச்சட்டங்கள் மூலம் நாட்டில் சர்வாதிகாரத்தை நிலைநாட்ட அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
நாட்டின் சட்டங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கை அரசியலமைப்பின் ஊடான அடக்குமுறையாகும் என்றும், சட்டப் புத்தகத்தில் இடம்பெறும் விதிமுறைகள் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முற்றாக அழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தடிகளாலும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளாலும் மேற்கொண்ட அடக்குமுறையைச் சட்டங்கள் மூலம் முன்னெடுக்க முயற்சி
கடந்த காலங்களில் தடிகளாலும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளாலும் துப்பாக்கிச் சூடுகளாலும் முன்னெடுக்கப்பட்ட அடக்குமுறையை, தற்போது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதன் மூலம் முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாகப் பொதுமக்கள், அரசியல்வாதிகள், தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 2 கோடியே 20 இலட்சம் மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் குடிமக்களின் மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதற்காகப் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
அரசாங்கத்தின் அடக்குமுறைச் சட்டங்கள் நீதித்துறையை அவமதிக்கின்றன
இந்தச் சட்டங்கள் நீதித்துறையைக் கூட அவமதிப்பதாகத் தெரிவித்த சஜித் பிரேமதாச, நீதிமன்றத்திற்குச் சொந்தமான அதிகாரங்களை அதனிடமிருந்து நீக்கி, அந்த அதிகாரங்களை நிறைவேற்று அதிகாரத்திடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
யார் பயங்கரவாதி என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்துக்கு வழங்கப்படுவதன் மூலம், ஜனநாயக ஆட்சிமுறையில் அரசாங்கத்தின் கருத்துக்கு முரணான நிலைப்பாட்டைக் கொண்ட அனைவரையும் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தும் அதிகாரம் கிடைக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போர் வெற்றிக்குப் பின்னர் சட்டவிரோதமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக, மக்களின் ஜனநாயக உரிமைகள், மக்கள் இறையாண்மை மற்றும் மக்கள் ஆதிக்கம் ஆகியவை பாதிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாகவே அந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையினரின் கோரிக்கையாக இருந்தது என்றும் அவர் நினைவுபடுத்தினார்.
புதிய அடக்குமுறைச் சட்டங்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைவிடவும் மோசமானவை
தற்போதும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகப் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
புதிய சட்டத்தின் மூலம், ஏற்கனவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் காணப்பட்ட ஜனநாயக உரிமைகளை மீறும் நடைமுறைகளையும் தாண்டி, மக்களை மேலும் அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில்கூட, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி, ஜனநாயகத்துக்கும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் இணங்கிய புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நடவடிக்கை மக்கள் ஆணைக்கு முரணானது
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமானது என்றாலும், அதனைச் சாக்காகக் கொண்டு 2 கோடியே 20 இலட்சம் மக்களின் மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் மீறுவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் மக்களால் வழங்கப்பட்ட ஆணைக்கு முரணானவை என்றும் அவர் தெரிவித்தார்.
‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ என்ற வாக்குறுதி முன்வைக்கப்பட்ட போதிலும், இன்று நாட்டில் வளமான நாடோ அழகான வாழ்க்கையோ உருவாகவில்லை என அவர் விமர்சித்தார்.
எனினும், அரசாங்கத்தின் 159 உறுப்பினர்களைப் பொறுத்தவரையில், வளமான வாழ்க்கையும் மேம்பட்ட நிலையும் ஏற்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
The post அரசாங்கத்தின் புதிய சட்டங்கள் சர்வாதிகார ஆட்சியை உருவாக்கும் முயற்சி – சஜித் விசனம் appeared first on LNW Tamil.