உள்ளுராட்சி மன்றத் தேர்தலை, குறித்த நேரத்தில் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம்

உள்ளுராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் இல்லை என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். உரிய காலத்தில் தேர்தல் நடைபெறும். அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்படும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எண்ணாயிரத்து 719 பேர் தற்போது உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கையை நான்காயிரமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு வருடாந்தம் சுமார் 32 லட்சம் ரூபா செலவாகும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி விரைவில் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் தேர்தலில் அதிகளவான இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
