எதிர்வரும் இரண்டு வருடங்களில் மக்களின் வரிச்சுமை குறைக்கப்படும் – ஜனாதிபதி
சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட இலங்கைக்கு கடன் வழங்கிய எட்டு நாடுகள், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை பாதுகாப்பதன் மூலம் எதிர்வரும் இரண்டு வருடங்களில் மக்களின் வரிச்சுமை குறைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்களின் வருமானங்களை அதிகரித்து, ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்துவதே சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடாகும்.
அதனை மீறி செயற்பட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். நேற்று ஜாஎல நகரில் இடம்பெற்ற இயலும் ஸ்ரீலங்கா மக்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரிகளை நீக்கினால் பொருளாதாரம் மேம்படும் என வரிகளை குறைத்தார். அதனால், நாட்டின் பொருளாதாரம் சரிந்தது.
சஜித் பிரேமதாஸவும், அனுரகுமார திஸாநாயக்கவும் தற்போது மக்களுக்கு அரசியல் வாக்குறுதிகளை வழங்குகின்றார்கள். அவை நாட்டினதும், மக்களினதும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட வாக்குறுதிகள் அல்ல.
அவர்கள் உண்மையிலேயே மக்களைப் பற்றி சிந்தித்தால், 2022ஆம் ஆண்டு பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்து நாட்டை பொறுப்பேற்றிருப்பார்கள் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.